ஐக்கிய அரபு எமிரேட்டில் வசித்து வரும் இந்திய பெண் ஒருவர், தன்னுடைய ஃபோட்டோ ட்ரோல் ஆனதால் விரக்தியில் ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
20 வயதுடைய அந்தப் பெண் தற்கொலை செய்யப் போவதாக நேற்று நள்ளிரவு அறிவித்தார். இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது. துபாய் போலீசின் க்ரைம் பிரிவினர் இந்தத் தகவலை பார்த்துள்ளனர். ஆனால், பெண்ணின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் சமூக வலைத்தளங்களில் இல்லை.
இருப்பினும், அந்தப் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். தொழில்நுட்ப உதவியுடன் அந்தப் பெண் இருக்கும் இடத்தினை கண்டுபிடித்த க்ரைம் பிரிவு போலீசார், அந்தப் பகுதியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் அந்தப் பகுதிக்கு உடனடியாக விரைந்து சென்று பெண்ணின் தந்தையையும் கண்டுபிடித்துள்ளார். அவரிடம் போலீசார் தகவலை தெரிவித்துள்ளனர்.
உடனடியாக பெண்ணின் அறை கதவை திறந்து பார்த்த போது, அவர் தற்கொலை செய்வதற்கு தயாராகி வந்துள்ளார். போலீசார் அந்தப் பெண்ணை சமாதானப் படுத்தி தற்கொலை முடிவை கைவிட வைத்தனர்.