மியான்மர் நாட்டில் தமிழர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரின் மொரே பகுதியில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் சிலர் வசித்து வருகின்றனர். 1960களில் இருந்துவர் இவர்கள் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களில் ஆட்டோ ஓட்டுநர் மோகன், வியாபாரி அய்யனார் ஆகிய இருவர், தங்களது நண்பர்களை சந்திக்க அண்டை நாடான மியான்மரின் தமு நகருக்கு சென்றுள்ளனர். இருவரும் வீடு திரும்பாத நிலையில் தலையில் குண்டு காயத்துடன் இறந்து கிடந்ததை அறிந்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், தமிழர்களை சுட்டுக்கொன்றது மியான்மர் ராணுவ ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழு என்பது தெரியவந்துள்ளது. மதியம் 12:30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவிலை. சுட்டுக்கொல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மோகனுக்கு சில மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
“மியான்மர் ராணுவம் அவர்களை உளவாளிகள் என்று சந்தேகித்து சுட்டுக் கொன்றிருக்கலாம். மியான்மரின் இந்தப் பகுதியில் ராணுவத்தால் தினமும் ஒரு கொலை நடக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் நடந்துள்ளது” என்று அந்நாட்டின் தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழர்கள் கொல்லப்பட்ட சம்வத்தை அடுத்து தமிழர்கள் வசித்து வந்த மணிப்பூரின் மொரே நகரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்களும் ஓடவில்லை. பதற்றமான சூழல் நிலவுவதால் அந்நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.