இரு ரஷ்ய தூதரக அதிகாரிகள், ஆப்கனின் காபூலில் தற்கொலை படையினரின் வெடிகுண்டு தாக்குதலினால் கொல்லப்பட்டிருக்கிறனர் என்றும், இந்த தாக்குதலில் 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காவல்துறை தரப்பில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவலின்படி, இருவர் உயிரிழந்திருப்பதாக மட்டுமே தகவல் வெளியாகியுள்ளது. இறந்த இருவரின் அடையாளங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. அவர்களை தாக்கிய அந்நபர், தொடர்ந்து அங்கிருந்த வாயிலொன்றை நெருங்கி மேலும் தாக்குதலை ஏற்படுத்த முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கிருந்த ஆயுதமேந்திய காவலர்களால் அவர் அப்போதே சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சம்பவம் நடந்த இடத்தை சேர்ந்த தலைமை காவல்துறை அதிகாரி மவால்வி சாபிரி ஊடகங்களில் “தற்கொலைப்படை தாக்குதலை ஏற்படுத்திய அந்நபர், அங்கு பணியிலிருந்த ரஷிய தூதரக (தலிபான்) அதிகாரிகளால் கண்டுகொள்ளப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதலில் மொத்த உயிரிழப்புகள் எவ்வளவு என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கும் தகவலில், “காபூல் நேரப்படி காலை 10:50 மணியளவில் தூதரகத்தின் நுழைவாயிலுக்கு அருகே அடையாளம் தெரியாத நபரொருவர் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துள்ளார். இதனால் இரு ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் ஆப்கன் குடிமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.