சிங்கப்பூர்: ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும்: வீடு தேடி பொருட்களை கொண்டு வரும் ரோபோக்கள்

சிங்கப்பூர்: ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும்: வீடு தேடி பொருட்களை கொண்டு வரும் ரோபோக்கள்
சிங்கப்பூர்: ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும்: வீடு தேடி பொருட்களை கொண்டு வரும் ரோபோக்கள்
Published on

சிங்கப்பூரில் புது முயற்சியாக டெலிவரி பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் உங்களுக்கு தேவையான பொருட்களுடன் ரோபோ வந்து வாசல்கதவை தட்டும்.

வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்யும் காலம் இது. ஆர்டர் செய்த சிறிது நேரத்தில் டெலிவரி பாய் வந்து வீட்டு கதவை தட்டுவார். ஆனால் நீங்கள் சிங்கப்பூரில் இருந்தால் ரோபோ வந்து வீட்டுக்கதவை தட்டும். சிங்கப்பூரில் புது முயற்சியாக டெலிவரி பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கேமெல்லோ என பெயரிடப்பட்ட இரண்டு ரோபோக்கள் வாடிக்கையாளர்களிடம் பொருட்களை கொண்டு சேர்க்கும் பணிக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோக்களில் இரு அறைகள் உண்டு.

இவை 20 கிலோ வரையிலான பொருள்களை எந்தவித சேதமும் இன்றி கொண்டு சேர்க்கும் திறன் பெற்றவை. 700 வீடுகள் கொண்ட குடியிருப்பிற்கு பொருள்களை கொண்டு சேர்க்கும் பணியை சோதனை அடிப்படையில் செய்து வருகின்றன. விரைவில் இச்சேவை பலபகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது இந்த ரோபோக்களை வடிவமைத்த நிறுவனமான OTSAW.

இந்த ரோபோக்கள் முப்பரிமாண சென்சார்கள், கேமரா போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளன. முற்றிலும் தானாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்திருந்த பொருள்கள் வைக்கப்பட்டவுடன், இவை குடியிருப்பை நோக்கி வரும் பாதை, பொருள்களை எடுத்து சென்று வழங்கும் இடம் போன்ற தகவல்கள் வாடிக்கையளர்களின் கைபேசிக்கு அனுப்பப்படும். வார நாள்களில் தினமும் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் அரை நாளும் இந்த ரோபோக்கள் பணி செய்கின்றன.

கொரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற பொருள்கள் விநியோகத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதாக ரோபோக்களை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. ரோபோக்கள் ஒரு முறை பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் சென்று வழங்கிய பின்னரும் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் வசதியை தன்னகத்தே கொண்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com