40 வயதுக்கு உட்பட்ட அமெரிக்க தொழிலதிபர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பேர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் ‘ஃபார்ச்சூன்’ பத்திரிகை அந்நாட்டில் உள்ள 40 வயதுக்கு உட்பட்ட முக்கிய தொழிலதிபர்கள் 40 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். ‘இன்டெல்’ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் ஆய்வுக் கூடத்தின் துணைத் தலைவர் அர்ஜூன் பன்சல்(35) இடம்பெற்றுள்ளார்.
(அன்கிதி போஸ்)
அவருடன் சேர்ந்து ‘ஸிலிங்கோ’ என்ற ஃபேஷன் தளத்தின் சிஇஒ அன்கிதி போஸ்(27) என்ற இந்திய வம்சாவளி பெண்ணும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அன்கிதி போஸ் தனது நிறுவனத்தை பாங்காக் சென்று அங்கு இருக்கும் பொருட்களுக்கு முறையான ஆன்லைன் விற்பனை இல்லை என்று உணர்ந்த பின்பு தனது தொழிலை தொடங்கியுள்ளார். இந்தத் தொழில் தற்போது அசுர வளர்ச்சி அடைந்து மிகவும் லாபம் தரும் தொழிலாக மாறியுள்ளது.
(அர்ஜூன் பன்சல்)
அதேபோல ‘இன்டெல்’ நிறுவனத்தின் மிகவும் முக்கியமான மைக்ரோ சிப்பை செயற்கை நுண்ணறிவுடன் இயக்கும் தொழில்நுட்பத்தில் அர்ஜூன் பன்சலின் குழு ஈடுபட்டு வருகிறது. அத்துடன் இவரின் ‘நெர்வானா’ என்ற நிறுவனத்தை இன்டெல் நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு 350 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.