பிறந்து வளர்ந்த இடம் தேடி ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு ஆமை ஒன்று பயணித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுமே தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தைப் மறப்பதில்லை. மனிதர்கள் தங்களுக்கு விருப்பமான இடத்தில் தங்கள் வீட்டினை அமைத்துக் கொள்கின்றனர். அதுவும் தங்களுக்கு விருப்பமான முறையில் வடிவமைத்துக்கொள்கின்றனர். இதில் ஏழ்மையின் காரணமாக கோடிக்கணக்கானோர் வீடின்றி வாழ்வது தனிக்கதை. பொதுவாக மனிதர்கள் தங்களுக்கு பிடித்த இடத்தில் வாழ்ந்தாலும், பிறந்த இடத்தினை மறப்பதில்லை. அதனால்தான் ‘சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல’ என்று சொல்வார்கள்.
இதனால்தான் வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு சென்ற போதிலும் அவர்கள் தாயகம் திரும்பி விழாக்களில் பங்கேற்கின்றனர். இதிலும் சிலர் சிம்மசொப்பனமாக தாயகம் திரும்பாமலே இருந்து விடுகின்றனர். அப்படி இருந்தாலும் கூட அவர்களின் மனதில் தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரின் நினைவுகள் பச்சை பசேல் என்று செழுமையாகவே இருக்கும். என்றாவது ஒருநாள் அங்கு செல்ல வேண்டும் என்ற ஏக்கமும் இருக்கும். இந்த குணம் மனிதர்களுக்கு மட்டுமில்லை புவியில் வசிக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உண்டு என்பதை உறுதி செய்திருக்கிறது ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆமை ஒன்று.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் கடந்த 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானிய மீன்பிடி படகு ஒன்றில் குட்டி கடலாமை ஒன்று சிக்கியுள்ளது. அந்த ஆமையை பிடித்த ஜப்பானிய மீனவர் அது காயம்பட்டிருப்பதை அறிந்துள்ளார். இதையடுத்து கடல்வாழ் உயிரினங்கள் பராமரிப்பு மையத்தினை அவர் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். அவர்கள் வந்து காயம்பட்டிருந்த ஆமையை பெற்றுச்சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
நாள்தோறும் அதற்கு பயிற்சிகள், மருந்துகள் கொடுத்து மீண்டும் நீந்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். இவ்வாறாக இருபது வருடங்கள் உருண்டோடின. 2 கிலோவில் பிடிபட்ட ஆமை 180 கிலோ அளவிற்கு வளர்ந்துவிட்டது. அதுமட்டுமின்றி நன்றாக நீந்தும் நிலைக்கு வந்ததால் அதனை கடலிலேயே விடுவதற்கு பராமரிப்பு மையத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, 2017ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி ஆமையை கடலில் விட்டு வழியனுப்பியுள்ளனர்.
அவர்களிடம் விடை பெற்ற ஆமை, தனது நீண்ட தேடலை தொடங்கியுள்ளது. இயற்கையாகவே கடலாமைகளுக்க பிறந்த இடத்தை உணரும் தன்மை உள்ளது என விஞ்ஞானிகள் கூறுவதை உறுதி செய்யும் விதமாக, தான் பிறந்த ஆஸ்திரேலியாவை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது யோஷி ஆமை. நாள் தோறும் 47 கி.மீட்டர் பயணம் செய்த யோஷி சுமார் 26 மாதங்களுக்குப் பிறகு தான் பிறந்து வளர்ந்த இடமான மேற்கு ஆஸ்திரேலிய கடல்பகுதியைச் சென்று சேர்ந்துள்ளது.
இந்தப் பயணத்தின் தூரம் சுமார் 37,000 கி.மீட்டர் ஆகும். இதனை சாட்டிலைட் கருவி மூலம் பராமரிப்பு மையத்தினரும், ஆய்வாளர்களும் தொடர்ந்து கண்காணித்துள்ளனர். யோஷி சென்றடைந்திருக்கும் அந்த இடம் வசதியான மனிதர்கள் தேன் நிலவு வந்து செல்லும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது யோஷியும் தனக்கு பிடித்தமான இணையை தேடிக்கொண்டிக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதுவரையில் சாட்டிலைட் கருவி மூலம் கண்காணிக்கப்பட்ட உயிரினத்தின் பயணத்தில் யோஷின் பயணமே அதிக தூரம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.