இந்தியாவில் பள்ளி செல்வோர் முதல் பணி செல்வோர் வரை, எல்லோரையும் கவர்ந்திழுத்த ஒரு நிறுவனம், Tupperware. இந்த நிறுவனம் வண்ணமயமான உணவு சேமிப்பு டப்பாகளுக்கு பிரபலமானதாகும். தன் தரமான பிளாஸ்டிக் பொருட்களால், குறிப்பாக உணவுப் பாதுகாப்பு டப்பாக்களால் இந்திய குடும்பங்களின் நம்பிக்கையைப் பெற்ற இந்த அமெரிக்க நிறுவனம், இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்களின் முன்னோடியாகத் திகழ்ந்தது. இந்த நிலையில், அந்த நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளதால் திவாலானதாக அறிவிக்கக்கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்காவில், 1946-ஆம் ஆண்டு எர்ல் டப்பர் என்பவரால் டப்பர்வேர் நிறுவனம் தொடங்கப்பட்டது. தன் வண்ணமயமான உணவு சேமிப்பு பொருட்களுக்கு பெயர்பெற்ற இந்த நிறுவனம், கொரோனா பேரிடருக்குப் பிறகு விற்பனையில் ஏற்பட்ட சரிவு, செலவினம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக திவாலானதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதல் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சொத்து உள்ள இந்த டப்பர்வேர் நிறுவனத்திற்கு, 1 பில்லியன் முதல் 10 பில்லியன் வரை கடன் இருப்பதாக அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது. டெலாவேர் மாவட்டத்திற்கான அமெரிக்க திவால் நீதிமன்றத்தில் அத்தியாயம் 11 திவால்நிலைப் பாதுகாப்பிற்காக மனு தாக்கல் செய்துள்ளது. இதனால், அந்த நிறுவனம் திவால் அறிவிப்பை வெளியிட உள்ளது. இதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் பணியில் டப்பர்வேர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. டப்பர்வேர் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டப்பர்வேர் திவால்நிலைப் பாதுகாப்பைத் தேர்ந்தெடுப்பதற்குமுன்பு 700 மில்லியன் டாலருக்கும் அதிகமான கடனுக்காக, கடன் வாங்கியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது நிறுவனம் அதன் கடனின் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இதனால் திவால் நடவடிக்கையின் அத்தியாயம் 11க்கு தாக்கல் செய்வதற்கான முடிவு எடுக்கக் காரணமாகியது.
2020 முதல் நஷ்டத்தைச் சந்தித்து வந்த இந்த நிறுவனம், நடப்பு ஆண்டு ஜூன் மாதம் வரை சுமார் 150 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததுடன், தனது தொழிற்சாலையையும் மூடியது. டப்பர்வேர் நிறுவனத்தின் கடனை அடைப்பதற்காக முதலீடுகள் செய்ய பல கடன் முதலீட்டு நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், டப்பர்வேர் நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களின் தேவைகள் குறைந்துள்ளதால், உற்பத்தியை தொடர முடியாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், டப்பர்வேரின் எதிர்காலம் என்பது தற்போது நிச்சயமற்றதாகவே உள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க; இந்தியாவின் மொத்த ஜிடிபி: 30% தென்மாநிலங்கள்.. சரிவைச் சந்தித்த வடமாநிலங்கள்!
டப்பர்வேரின் திவால் தாக்கல், அதன் கடன் மற்றும் செயல்பாடுகளை மறுகட்டமைப்பதில் முக்கிய படியைக் குறிக்கிறது. நீதிமன்றத்தின் மேற்பார்வையின்கீழ் அதன் வணிகத்தை மறுசீரமைத்து மீண்டும் தொடங்குவதை நிறுவனத்தின் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாறிவரும் நுகர்வோர் விருப்பங்களுக்கு ஏற்ப டப்பர்வேரின் தோல்வி மற்றும் ஆன்லைன் ஷாப்பிங்கின் அதிகரிப்பு ஆகியவை அதன் வீழ்ச்சிக்கு பங்களிக்கும் காரணிகளாக உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய நிறுவனமான டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆக உள்ளது வர்த்தக உலகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்க பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திவால் குறியீட்டின் அத்தியாயம் 11 என்பது, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகும். அதாவது, அந்த நிறுவனத்தின் மறுசீரமைப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியதாகும். தனிநபரோ அல்லது வணிக நிறுவனமோ, வழக்கமாக அதன் வணிகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், காலப்போக்கில் கடனாளிகளுக்கு பணம் செலுத்தவும் மறுசீரமைப்பு திட்டத்தை முன்மொழியப்படுகிறது. அந்த வகையில், வணிக நிறுவனம் அல்லது தனிநபர் அத்தியாயம் 11-இன் நிவாரணம் பெறலாம்.
இதையும் படிக்க: 27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா.. புதிய அலை உருவாக வாய்ப்பு.. அறிகுறிகள் என்ன?