அமெரிக்க அதிபராக குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் தேர்வாகியுள்ள நிலையில், அந்நாட்டின் உளவுத்துறை இயக்குநராக துளசி கப்பார்டை தேர்வு செய்துள்ளார் அவர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் மீண்டும் முடி சூடக் காரணமாக இருந்தவர்களில், எலான் மஸ்க், விவேக் ராமசாமி, துளசி காப்பர்ட் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள். இந்த நிலையில், எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி அமெரிக்கா அரசின் திறன் துறைக்கு தலைமை வகிப்பார்கள் என சமீபத்தில் அறிவித்திருந்தார் டொனால்ட் ட்ரம்ப். இந்நிலையில் துளசி கப்பார்டை உளவுத்துறை இயக்குநராக அறிவித்துள்ளார்.. யார் இந்த துளசி கப்பார்ட்?
43 வயதான துளசி கப்பார்ட் அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அல்ல. கடந்த 1981-ல் அமெரிக்காவில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் இந்து மதத்துக்கு மதம் மாறியுள்ளனர். கடந்த 2002-ம் ஆண்டில் தன்னுடைய 21 வது வயதிலேயே அமெரிக்காவில் உள்ள ஹவாய் மாகாண தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், 2003 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த துளசி கப்பார்ட் 2004-ம் ஆண்டு இராக் அனுப்பப்பட்டார். அங்கு ஒராண்டு காலம் தங்கி தனது ராணுவப் பணியை திறம்பட முடித்துவிட்டு நாடு திரும்பினார். அதன் பின் ராணுவ அதிகாரி முதல் லெப்டினன்ட் கர்னல் வரை பதவி உயர்வு பெற்றார். இப்படி ராணுவத்தில் கோலோச்சி வந்த துளசி கப்பார்ட் 2012-ம் ஆண்டு ஜனநாயக கட்சி சார்பில் ஹவாய் மாகாணத்தில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். இதுவரை 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் துளசி காப்பார்ட்.
2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். பின்னர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகி, ஜோ பைடனுக்கு ஆதரவு தெரிவிதார்.
கடந்த 2022-ம் ஆண்டு ஜனநாயக கட்சியில் இருந்து விலகிய அவர், இந்த வருட தொடக்கத்தில் குடியரசு கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பை ஆதரித்து பேசினார். இவரின் பேச்சு ட்ரம்பை மிகவும் கவர்ந்ததால் கமலா ஹாரிஸுக்கு எதிராக துளசி கப்பார்ட்டின் பங்களிப்பை பயன்படுத்தி கொண்டார் ட்ரம்ப். பொதுக் கூட்டங்கள், விவாதங்கள் என அனைத்திலும் பங்கேற்று ஜனநாயக கட்சியின் கொள்கைகளை விமர்சித்தார். அதோடு மட்டுமின்றி ட்ரம்பின் கொள்கைகளை வாக்காளரிடம் கொண்டு சேர்த்தார் துளசி கப்பார்ட். கமலா ஹாரிசுடன் ட்ரம்ப் நேருக்கு நேர் விவாதம் நடத்தவும் துளசி உதவி செய்தார். இப்படி பல வழிகளில் ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்கு துளசி கப்பார்ட் உதவியுள்ளார். அதன் காரணமாகவே தற்போது, நாட்டின் மிக உயரிய பதவிகளில் ஒன்றான உளவுத்துறை இயக்குநராக துளசி கப்பார்டை அறிவித்துள்ளார் ட்ரம்ப்.
இதுகுறித்து ட்ரம்ப் பேசும்போது, "முன்னாள் எம்.பியான, லெப்டினன்ட் கர்னல் துளசி கப்பார்டு, தேசிய புலனாய்வு இயக்குநராக பணியாற்றுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 2 தசாப்தங்களாக நமது நாட்டிற்காகவும், அனைத்து அமெரிக்கர்களின் சுதந்திரத்திற்காகவும் போராடியுள்ளார். அவர் அச்சமற்ற உணர்வை நமது உளவுத்துறை சமூகத்திற்கு கொண்டு வருவார். நமது அரசியலமைப்பு உரிமைகளை வென்றெடுப்பார் என்பது எனக்குத் தெரியும்" என பெருமைபடப் பேசியுள்ளார்.