அமெரிக்காவில் 2020 இல் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் துளசி கப்பார்ட் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி. போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனும், குடியரசு கட்சி சார்பில் அரசியல் அனுபவம் இல்லாத கோடீஸ்வர தொழிலதி பரான டொனால்டு ட்ரம்பும் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ட்ரம்பின் பதவிக்காலம் 2020வரை நீடிக்கும். மீண்டும் 2020ல் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அபதிர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட தயாராகிவரும் நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுபவரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை. இதில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேன், இந்திய வம்சாளி செனட்டர் கமலா ஹாரிஸ், செனட் சபை உறுப்பினர்கள் எலிசபெத் வாரன், கிர்ஸ்டன் கில்லிபிராண்ட் உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது இந்த பட்டியலில் இந்திய வம்சாவளி பெண் எம்.பியான துளசி கப்பார்டின் பெயரும் இணைந்து இருக்கிறது. சமோயா தீவை சேர்ந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் முதல்முறையாக எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு இந்திய வம்சாவளியினர் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.
ஜனநாயகக் கட்சி சார்பில் துளசி கப்பார்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி பெண் வேட்பாளர் என்ற பெருமையை பெருவார் என்பது குறிப்பிடத்தக்கது.