சர்ச்சைக்கு வித்திடும் ட்ரம்பின் கருத்துகள்.. அதிர்ச்சி அடையும் நிபுணர்கள்..!

சர்ச்சைக்கு வித்திடும் ட்ரம்பின் கருத்துகள்.. அதிர்ச்சி அடையும் நிபுணர்கள்..!
சர்ச்சைக்கு வித்திடும் ட்ரம்பின் கருத்துகள்.. அதிர்ச்சி அடையும் நிபுணர்கள்..!
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசு‌ம் ஒவ்வொரு சொல்லும் உலக அளவில் கவனம் பெறும். அதே அளவுக்கு சர்ச்சைக்குள்ளதாகவும் மாறும். சமீபத்திய அவரது பேச்சுகள், அரசியல் உலகதைத் தாண்டி அறிவி‌யல் உலகையும் அதிர்ச்சியடைச் செய்திருக்கின்றன.

கொரோனா பாதிப்பு உள்ளவர்கள், ஹைட்ராக்ஸி க்ளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்ளலாம் என்று ட்ரம்ப் கூறியதும், அதற்கு அவரைச் சார்ந்தவர்களே மறுப்புத் தெரிவித்தார்கள். கிருமிநாசினி கொரோனாவைக் கொல்லும் என்றால், அதை நோயாளிகளின் உடலில் செலுத்திவிடலாமே என்று சில நாள்களுக்கு முன்பு கூறியது, அறிவியல் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிருமிநாசினியைக் குடிக்கலாமா என்று கேட்டு சுகாதாரத்துறைக்கு மக்கள் போன் செய்யத் தொடங்கிவிட்டார்கள். பின்னர் அதனை நகைச்சுவையாகக் குறிப்பிட்டதாகக் கூறி ட்ரம்ப் தப்பித்துவிட்டார். அதற்குள்ளாகவே சமூக வலைத்தளங்கள் அவரைக் கடுமையாகக் கேலி செய்து முடித்துவிட்டன.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்கள் அமெரிக்காவில் போதுமான அளவு இல்லை என்று உலக அளவில் அறியப்பட்ட மருத்துவ விஞ்ஞானியும், வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்புக் குழுவில் அங்கம் வகிப்பவருமான அந்தோனி ஃபாக்சி கூறியபோது, அதெல்லாம் இல்லை என்று நேரடியாகவே மறுத்துவிட்டார் ட்ரம்ப்.

இப்படி அறிவியலுக்குச் சவால்விடும் ட்ரம்பின் வழக்கம் சமீபத்தில் தொடங்கியதல்ல. அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோதே தடுப்பூசி போடும் வழக்கத்தைச் சாடியிருக்கிறார். பருவநிலை மாற்றம் என்பது சீனாவின் சதித் திட்டம் என்று கூறியிருக்கிறார். அதிபரான பிறகு பருவநிலை மாற்ற உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.

அறிவியலுக்கு எதிராகப் பேசும் அதிபரை அமெரிக்கா இதுவரை பார்த்ததில்லை என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். நிலாவில் தரையிறங்கினோம், செவ்வாயில் தடம்பதித்தோம், சூரிய மண்டலத்தைக் கடந்தோம் என அறிவியலைக் கொண்டே கட்டமைத்துக் கொண்ட அமெரிக்காவுக்கு, அதை கடுமையாக எதிர்க்கும் அதிபர் வாய்த்திருப்பது போதாத காலம்தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com