இர்மா புயலால் பாதிக்கப்பட்ட ஃபுளோரிடா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சேதங்களை பார்வையிட்டார்.
ஃபுளோரிடாவை புரட்டிப் போட்ட இர்மா புயலால் அம்மாகாணத்தில் இதுவரை இயல்பு நிலை திரும்பவில்லை. சுமார் 30 லட்சம் வீடுகள் மின் இணைப்பு இல்லாமல் இருளில் தத்தளித்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஹெலிகாப்டர் மூலம் புயல் சேதங்களை பார்வையிட்டார். தொடர்ந்து வாகனம் மூலம் சாலை வழியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயலால் பாதிக்கப்பட்ட விர்ஜின் தீவுகளிலும், போர்ட்டோ ரிக்கோவிலும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். அப்போது, புயலின் பாதிப்பை பார்த்த பிறகாவது பாரிஸ் பருவநிலை மாற்றம் தொடர்பான உடன்பாட்டை இனியாவது ஏற்றுக் கொள்வீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு, சற்று பின்னோக்கி சென்று பார்த்தால் 1930 ஆம் காலக்கட்டத்திலும் கூட இதை விட மிகப் பெரிய புயல்கள் அமெரிக்காவை தாக்கி இருந்ததை நாம் அறிந்து கொள்ளலாம் என பதில் அளித்தார்.