இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது காதல் மனைவி மெலனியாவுடன் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க உள்ளார். ட்ரம்புக்கும் தாஜ்மகாலுக்கும் ஏற்கெனவே சில தொடர்புகள் இருக்கின்றன.
தொழிலதிபர், தொலைக்காட்சிப் பிரபலம், எழுத்தாளர், அரசியல்வாதி என பல்வேறு பரிமாணங்களை கொண்ட ட்ரம்ப், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் என கணக்கிலடங்கா சொத்துகளுக்குச் சொந்தக்காரர். ட்ரம்ப் டவர், ட்ரம்ப் தாஜ் மஹால், ட்ரம்ப் பிளாசா என அமெரிக்கா முழுவதும் இவரது பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் சொத்துகள் ஏராளம்.
இந்தியாவில் உள்ள முக்கிய நினைவுச் சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்வது தாஜ்மஹால். முழுவதும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட இந்தக் காதல் சின்னம் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றங்கரையோரம் 1600 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதேபோன்று அமெரிக்காவிலும் ட்ரம்புக்கு சொந்தமாக ஒரு தாஜ்மஹால் இருந்தது. அட்லாண்ட்டிக் நகரில்தான் இருந்தது ட்ரம்ப் தாஜ்மஹால் எனும் சூதாட்ட விடுதி.
ட்ரம்ப் கடந்த 1990-ம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி அட்லாண்ட்டிக் நகரில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட பிரமாண்ட சூதாட்ட விடுதி ஒன்றை தொடங்கினார். இந்தியாவில் உள்ள தாஜ்மஹாலைப் போன்ற அமைப்புடன் உருவாக்கப்பட்ட இந்த விடுதிக்கு 'டிரம்ப் தாஜ்மஹால்' என்றே பெயர் சூட்டியிருந்தார். சுமார் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சூதாட்ட விடுதியில் 3 ஆயிரம் பேர் பணியாற்றி வந்தனர்.
உலகின் மிகப்பெரிய சூதாட்ட விடுதியாக ஜொலித்த ட்ரம்ப் தாஜ்மஹாலுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு சிக்கல் ஏற்பட்டது. அட்லாண்ட்டிக் நகர சட்டங்களின்படி பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வுகால பலன்களை வழங்க விடுதியின் நிர்வாகம் மறுத்துவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி ட்ரம்ப் தாஜ்மஹால் மூடப்பட்டது.