அமெரிக்காவில் அரசு ஒப்பந்தப் பணிகளில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்த தடை விதிக்கும் அரசாணையில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல நாடுகளிலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. பொருளாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே, அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கும் வகையில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்வதற்காக வழங்கப்படும் ஹெச்-1 பி உள்ளிட்ட பல விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்துவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் அரசு ஒப்பந்தப் பணிகளில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்த தடை விதிக்கும் அரசாணையில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த உத்தரவின் படி எச் 1 பி விசா உள்ளவர்களை அரசு நிறுவனங்கள் ஒப்பந்தப் பணிகளில் அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பு பெறுவது உறுதியாகும் என அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அதே நேரம் இந்தியர்கள் உள்ளிட்டவர்களின் வேலைவாய்ப்புகள் மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.