ட்ரம்பின் ஆதரவாளர், கிம்மின் நண்பர் ? யார் அவர் ?

ட்ரம்பின் ஆதரவாளர், கிம்மின் நண்பர் ? யார் அவர் ?
ட்ரம்பின் ஆதரவாளர், கிம்மின் நண்பர் ? யார் அவர் ?
Published on

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் வரும் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் சந்திக்கும்போது, ஒரு முக்கியமான விருந்தினர் உடனிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் யார் அவருக்கும் இந்தச் சந்திப்புக்கும் என்ன தொடர்பு ?

டென்னிஸ் ரோத்மன். யாரும் எளிதில் நெருங்க முடியாத வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் சிரித்துப் பேசி மகிழும் கூடைப்பந்து வீரர். அமெரிக்காவைச் சேர்ந்த ரோத்மன் இதுவரை 5 முறை வடகொரியாவுக்குச் சென்று கிம் ஜாங் உன்னைச்சந்தித்துப் பேசியிருக்கிறார். முதன் முதலில் 2013-ஆம் ஆண்டு வடகொரியாவுக்குச் சென்ற ரோத்மன், தனது அணி வீரர்களுடன் பல்வேறு காட்சிப் போட்டிகளை நடத்தினார். கிம் ஜாங் உன் பதவிக்கு வந்த பிறகு அவரை நேரில் சந்தித்த முதல் அமெரிக்கர் என்ற பெயர் ரோத்மனுக்கு உண்டு.

இளம் வயதிலேயே கூடைப்பந்து விளையாட்டின் தீவிர ரசிகரான கிம் ஜாங் உன், ரோத்மனுடான நட்பை அதிகம் மதிப்பவர். வடகொரியாவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கர் ஒருவரைக் குறித்து ரோத்மன் கேள்வி எழுப்பியது இரு நாடுகளுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியது. அப்போதும்கூட கிம் ஜாங் உன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்லவில்லை. ஒரு கட்டத்தில் தனது கருத்துக்காக ரோத்மன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இந்தச் சர்ச்சைகள் முடிந்தபிறகு ரோத்மன் கேட்டுக் கொண்டபடி சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்கரை கிம் ஜாங் உன் விடுதலை செய்தார்.

2014-ஆம் ஆண்டு மீண்டும் வடகொரியாவுக்குச் சென்ற ரோத்மன், கிம் ஜாங் உன்னின் குழந்தையுடன் விளையாடி மகிழ்ந்தார். ஒவ்வொரு முறையும் ஏராளமான பரிசுப் பொருள்களை கிம் ஜாங் உன், ரோத்மனுக்குக் கொடுப்பது வழக்கம். கிம் ஜாங் உன் மாத்திரமல்ல, அவரது தந்தையும் கூடைப்பந்து விளையாட்டின் தீவிரமான ரசிகர். 18 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மேடலின் ஆல்பிரைட் வடகொரியாவுக்குச் சென்றபோது, மைக்கேல் ஜோர்டான் கையெழுத்திட்ட பந்து ஒன்றை பரிசாக வழங்கினார்.

தற்போது கிம் ஜாங் உன்னின் நெருங்கிய நண்பராகிவிட்ட ரோத்மனுக்கு வயது 57. அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தீவிரமான ஆதரவாளர்கூட. அதனால் கிம் ஜாங் உன்னும் ட்ரம்பும் முதல்முதலில் சந்தித்துக் கொள்ளும்போது, உடனிருக்க வேண்டியவர்கள் பட்டியலில் இடம்பெறுவதற்குப் பொருத்தமானவராகிறார். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com