டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்று முதல் நூறு நாட்கள் நாளையுடன் (ஏப்ரல் 29) முடிகிறது. அமெரிக்காவை பொருத்தவரையில் முதல் நூறுநாட்களை ஆய்வு செய்துதான் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிபரின் வெற்றி தீர்மானிக்கப்படும். டிரம்ப் அதிபர் மாளிகைக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைகிறது என்றவுடன் பலர் அவரது அரசின் வெற்றி தோல்விகளை ஆராய தொடங்கினர். அதிபர் டிரம்ப் கூறிய வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன?
அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் மதில்சுவர் கட்டுவது, அந்த மதில் சுவருக்கு மெக்ஸிகோவையே பணம் கொடுக்க வைப்பது என்பது அதிபர் டிரம்பின் முக்கிய வாக்குறுதி. ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
அமெரிக்காவில் ஒபாமா கேர் என்று அறியப்பட்ட ஜனநாயக சுகாதார சீர்த்திருத்த சட்டத்தை தான் பொறுப்பேற்ற முதல் நாளில் ரத்து செய்வேன் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், சுகாதாரத் திட்டத்துக்காக புதிய மசோதாவைக் கொண்டுவரும் அவரது குடியரசுக் கட்சியின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த ஆணையிட்டார் டிரம்ப். அதிலும் விமர்சனங்களை ஏகமாகச் சந்தித்தார். இது குறித்து அவர் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்று, அவரைக் கலாய்க்கக் காரணமாக அமைந்தது...அந்தப் பேட்டியில் தான் தாக்குதல் தொடுக்க உத்தரவிட்ட நாடு என்று வாய் தவறி ஈராக் என்று கூறி விட்டார் ட்ரம்ப். அதை வைத்து சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அவரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டினார்கள்.
இந்தியாவில் குடும்ப அரசியல் மிகவும் பிரபலம். ஆனால் அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப்பும் குடும்ப அரசியல் செய்கிறார் என்ற விமர்சனத்திற்குத் தப்பவில்லை.
அதிபர் டிரம்ப்புக்கு ஆலோசகர்கள் அவரின் மகள் இவான்கா டிரம்ப்பும் இவான்காவின் கணவர் ஜாரெட் குஷ்னரும்தான். சரி இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் உருப்படியாக ஏதாவது ஆலோசனை சொல்கிறார்களா என்றால் அதுவும் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. குழந்தை பராமரிப்பு, பெண்கள் உரிமை போன்ற பல விஷயங்களில் இவான்காவுக்கு தெளிவு இல்லை என்கிறார்கள் ட்ரம்ப் விமர்சகர்கள். இவான்காவின் கணவர் ஜாரெட் குஷ்னர் பல முக்கிய பொறுப்புகளை வகிக்கிறார். டிரம்பின் எல்லா முக்கிய சந்திப்புகளிலும் அவர் இடம் பெற்றிருப்பார். மத்திய கிழக்கு நாடுகளில் அமைதிக்கான பேச்சு வார்த்தை நடத்துவது, பிற நாடுகளின் தொடர்புக்கான முக்கிய புள்ளியாக செயல்படுவது....உள்நாட்டில் குற்றவியல் நீதி அமைப்பை சீரமைப்பது, மொத்த அரசு நிர்வாகத்தையும் சீரமைப்பது என பெரும் பொறுப்புகள் இவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.