அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு சிங்கப்பூரில் 12 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையே நடக்கவுள்ள சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி வரும் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் இந்தச் சந்திப்பு காலை 9 மணி அளவில் நடைபெறும் என வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அண்மையில் அமெரிக்கா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் பிரதிநிதி, நியூயார்க்கில் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை சந்தித்தார். இதைத்தொடர்ந்து வாஷிங்டன் சென்று அதிபர் ட்ரம்பை சந்தித்து, கிம் ஜாங் உன் கொடுத்தனுப்பிய கடிதத்தையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே நடக்கவுள்ள சந்திப்புக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக வரும் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் காலை 9 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கிம் ஜாங் உன்னின் கடிதத்தை தொடர்ந்தே இந்தச் சந்திப்பை நடத்த அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது. எனினும் அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.