அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பதவி நீக்க தீர்மானம் நியாயமற்றது என கருத்து தெரிவித்துள்ளார். அதேசமயம், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலுக்காக தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பை பதவி நீக்குவதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அந்நாட்டின் முக்கியமான நாடாளுமன்ற கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த ட்ரம்ப், தவறு இழைக்காத நிலையில், தமக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவது நியாயமற்றது என ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், தமது ஆட்சியில் அமெரிக்கா சிறப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ட்ரம்புக்கு எதிராக கொண்டு வரப்பட்டிருக்கும் பதவி நீ்க்க தீர்மானம் தற்போது பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்களின் பலம் அதிகமாக இருப்பதால், இந்தத் தீர்மானம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அடுத்ததாக நூறு உறுப்பினர் கொண்ட செனட் சபையின் ஒப்புதலுக்காக தீர்மானம் அனுப்பி வைக்கப்படும். அங்கு அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி எம்.பி.க்களே பெரும்பான்மையாக இருப்பதால், தீர்மானம் நிறைவேறுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
ட்ரம்பை பதவி நீக்குவதற்கு செனட் சபையில் இருக்கும் நூறு எம்.பி.க்களில் 67 பேர் அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அப்படி குடியரசுக் கட்சி எம்.பி.க்களே அவருக்கு எதிராக வாக்களிக்க நேரிட்டால், ட்ரம்ப் பதவியில் இருந்து நீக்கப்படுவார். அவருக்கு பதிலாக துணை அதிபர், அதிபராக பொறுப்பேற்பார். அமெரிக்க வரலாற்றில், இதுவரை அதிபர்கள் யாரும் பதவி நீக்கம் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.