சி.என்.என் செய்தி நிறுவனம் மீது 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் லாடர்டேலில் (Fort Lauderdale) உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தன் மீது அவதூறுக் கருத்துக்களை, செய்திகளை வெளியிட்டு வருவதாக சி.என்.என். செய்தி நிறுவனம் மீது அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார். தமது எதிர்கால அரசியல் பரப்புரையை குறுக்கிடும் வகையில் தன் மீது அவதூறு செய்திகளை சி.என்.என் செய்தி நிறுவனம் பரப்பி வருவதாக டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனவரி 2021 ஆம் ஆண்டு முதல், "தி பிக் லை" என்ற வார்த்தையை தனக்கு எதிராக 7 ஆயிரத்து 700 முறை சி.என்.என் நிறுவனம் பயன்படுத்தியதாக தமது மனுவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். தமது நற்பெயெருக்கு கலங்கம் விளைவிக்கும் இந்த முயற்சிக்கு நஷ்ட ஈடாக சி.என்.என். நிறுவனம் 475 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 3,863 கோடியை நஷ்ட ஈடாக கோரியுள்ளார் டிரம்ப். மற்ற செய்தி நிறுவனங்களுக்கு எதிராகவும் இதே போன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.