கிருமிநாசினிகளை உடலில் செலுத்தி கொரோனாவுக்கு சிகிச்சையளிக்குமாறு தாம் நையாண்டித்தனமாகவே கூறியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகிலேயே அமெரிக்காதான் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 9 லட்சத்து 25 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக 52 ஆயிரம் உயிரிழந்திருக்கிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், பாதிப்பு அதிகரித்துவாறே இருக்கிறது.
இந்நிலையில் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், புறஊதா கதிர் ஒளிக்கற்றை வெப்பம் மூலமாகவும், கிருமிநாசினிகளை உடலில் செலுத்திக்கொள்வதன் மூலமாகவும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று கூறியிருந்தார். அமெரிக்க அதிபரின் இந்த அபாயகரமான அறிவுரை அந்நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளையும் அதிர வைத்தது.
இதனால் பதறிப்போன கிருமிநாசினி தயாரிப்பு நிறுவனங்களும், மருத்துவர்களும் கிருமிநாசினிகளை உடலுக்குள் செலுத்துவது மிகவும் அபாயகரமானது என்று எச்சரிக்கை விடுத்தனர். பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த கருத்து பற்றி விளக்கம் அளித்துள்ள ட்ரம்ப், தாம் அந்த அறிவுரையை கூறியது நையாண்டித்தனமாகவே என்று தெரிவித்துள்ளார்.