திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் கீழ அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்த ராஜூ அய்யரின் திறமையினை பார்த்த அமெரிக்கா, அந்நாட்டு ராணுவத்தில் முதல் தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக நியமித்துள்ளது. இதை லால்குடி அருகே மணக்கால் கிராம மக்கள் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் பகிர்ந்தனர்.
லால்குடி அருகே மணக்கால் ஊராட்சியில் உள்ள கீழ அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், சாவித்ரி ஆகியோரின் மகன் ராஜூ அய்யர். இவர், திருச்சி துவாக்குடியில் உள்ள என்ஐடியில் பிடெக் ( எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் )படித்தார். பின்னர் அமெரிக்க நாட்டில் எம்எஸ் மற்றும் பிஎச்டி படித்துள்ளார்.
இதையடுத்து அமெரிக்காவில் பல்வேறு ஜடி நிறுவனங்களில் பணியாற்றிய நிலையில், அவரது திறமையை அறிந்த அமெரிக்க ராணுவம், அந்நாட்டு ராணுவத்தின் முதல் தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக ராஜூ அய்யரை நியமித்துள்ளது. இந்த பதவி ராணுவத்தில் 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரல் பதவிக்கு நிகரானது ஆகும். அந்நாட்டின் ராணுவ தலைமையிடமான பென்டகன் உருவாக்கிய இந்த உயர் பதவிக்கு ராஜீ அய்யர் விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.