எகிப்து நாட்டில் செங்கடலில் குளித்தபோது ஆஸ்திரியா, ருமேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகளை சுறா மீன் கடித்து குதறிய பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது.
எகிப்து நாட்டில் சுறா தாக்கி சுற்றுலாப் பயணிகள் இருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. எகிப்தின் சால் ஹசீஷ் பகுதியிலுள்ள செங்கடலில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த 68 வயது பெண் ஒருவர் நீச்சலில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுறா ஒன்று தாக்கியதால் அவர் அலறித் துடித்தார்.
அப்பெண்ணின் கை மற்றும் காலை சுறா கடித்துத் தின்றதை கண்ட சக சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்து விரைந்த மீட்புக்குழுவினர், ரத்த வெள்ளத்தில் மிதந்த ஆஸ்திரிய சுற்றுலாப் பயணியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
இருப்பினும் அவர் கொண்டுவரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முன்னதாக அதே பகுதியில் ருமேனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சுறா தாக்கி உயிரிழந்திருப்பதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து 2 சுற்றுலா பயணிகள் சுறா மீன் தாக்கி உயிரிழந்ததை அடுத்து செங்கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர் அதிகாரிகள்.