ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஹோட்டல்கள் மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன.
ஜப்பான் நாட்டில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 90க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
இதனை அடுத்து வைரஸ் தொற்றைத் தடுக்கும் பொருட்டு, டோக்கியோ, ஒஸாகா உள்ளிட்ட முக்கியமான 6 நகரங்களில் ஒரு மாத காலத்திற்கு அவசர கால நிலை பிரகடனம் செய்து பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஜப்பான் மக்கள் தொகையில் 44 சதவிகித மக்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில்,ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஹோட்டல்கள் மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன. முதற்கட்ட வைரஸ் அறிகுறி இருப்பவர்களுக்கு இந்த ஹோட்டல்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக ஹோட்டல்களில் சிகிச்சைக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளில் உள்ள சாதாரண வார்டுகள் சிறப்பு வார்டுகளாக மாற்றப்படுகின்றன.