அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 22 மாத குழந்தையான ஆன அயன்ஷ் குமார், ஆன்லைனில் தனது தாயின் செல்போன் மூலமாக $2,000 (ரூ 1.4 லட்சம்) மதிப்புள்ள மரச்சாமான்களை ஆர்டர் செய்துள்ளார்.
மொபைல் உள்ளிட்ட சாதனங்களை குழந்தைகளிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கும்போது, அது சாதனங்கள் அல்லது குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல என்று நியூ ஜெர்சியில் நடந்த இந்த சம்பவம் மூலம் தெரிய வருகிறது.
தனது தாய் மது வால்மார்ட் இணையத்தை பயன்படுத்துவதை கவனித்த அந்த குழந்தை, அவர் இல்லாதபோது தற்செயலாக அந்த இணையத்தில் சென்று பொருட்களை ஆர்டர் செய்தது. புதிய வீட்டிற்கு சில பொருட்களை மட்டுமே வாங்க மது நினைத்திருந்தார், அனால் அவரின் மகன் அதிகளவில் பொருட்களை ஆர்டர் செய்திருந்தார்.
திடீரென அவர் ஆர்டர் செய்த பொருட்கள் வீட்டுக்கு வந்தபோது அவரின் பெற்றோர் ஆச்சரியமடைந்தனர். மிகப்பெரிய பேக்கிங்கில் பொருட்கள் வந்ததை கண்டு திகைத்த அவர்கள், வால்மார்ட் கணக்கில் சென்று பார்த்தபோது, அதில் நாற்காலிகள், பூக்கூடைகள் மற்றும் அவர்களுக்குத் தேவையில்லாத பல பொருட்களை ஆர்டர் செய்திருப்பதைக் கண்டுபிடித்தனர், இது தங்கள் மகனின் குறும்பு வேலை என்பதையும் கணடறிந்தனர்.
இது குறித்து அயன்ஷின் தந்தை பிரமோத் குமார் கூறுகையில், "அவர் இதைச் செய்தார் என்று நம்புவது மிகவும் கடினம், ஆனால் அதுதான் நடந்தது. அவர் எப்படி இதையெல்லாம் ஆர்டர் செய்தார் என்று இப்போது வரை நாங்கள் சிரித்துக்கொண்டிருக்கிறோம். இனி அவர் அறியாத வகையில் கடினமான கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும் " என்று கூறினார்