அமெரிக்காவில் ஐ.எஸ் அமைப்பு நடத்த இருந்த தாக்குதல் ஒன்று முறியடிக்கப்பட்ட செய்தி ஓராண்டு கழித்து வெளியாகியுள்ளது.
நியூயார்க் நகரிலுள்ள டைம்ஸ் சதுக்கம் மற்றும் சுரங்க ரயில் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜிஹாதி தாக்குதல், ரகசியப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு எஃப்.பி.ஐ அதிகாரியின் உதவியுடன் முறியடிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.அமைப்பினர் அந்தத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் ஒருவர் செப்டம்பர் 11 தாக்குதலை போல அடுத்து ஒரு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் போல நடித்து அவர்களிடம் தொடர்பு கொண்ட ஒரு எஃப்.பி.ஐ அதிகாரியால் இந்தத் திட்டம் கடந்த ஆண்டே முறியடிக்கப்பட்ட போதிலும், அந்த விபரங்கள் இப்போதுதான் வெளியிடப்பட்டன.
2010-இல் டைம்ஸ் சதுக்கத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பெட்ரோல் மற்றும் சில வேதிப்பொருட்களை வைத்து ஃபைசல் ஷாசாத் என்னும் நபர் வைத்த வெடிபொருள் செயல்படாமல் போனதால் அவர்களின் திட்டம் தோல்வியில் முடிந்தது. பின்பு கைது செய்யப்பட்ட ஃபைசல் தற்போது சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.