ஹாங்காங்கில் டிக்டாக் செயலியின் பயன்பாடு மற்றும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தேசிய பாதுகாப்புச்சட்டம் ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஹாங்காங்கில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியில் சீன அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, சமூக வலைதளத்தில் சீனாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நபர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபடத்தொடங்கியுள்ளது.
இதனால் ஹாங்காங்கின் தன்னாட்சி சுதந்திரம் பறிக்கப்படுவதாக எழுந்த தகவலையடுத்து ஹாங்காங் சந்தைகளிலிருந்தும் டிக்டாக் செயலி அகற்றப்படுவதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான தகவலின்படி ஹாங்காங்கில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிக்டாக் பயன்படுத்துகின்றனர்.
முன்னதாக, இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தேசிய பாதுகாப்பு நலன் கருதி இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்திருந்தது. இந்தியாவில் டிக்டாக் பிரியர்கள் இந்த தடைக்கு வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.