அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போரில் அதிபர் ட்ரம்ப் டிக்டாக்கினை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்றும் இல்லையென்றால் டிக்டாக்கிற்கு அமெரிக்காவில் தடைவிதிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு சீனத் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கை வாங்குவதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறியது.
தற்போது டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடரப்போவதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 45 நாட்களுக்குள் டிக்டாக் செயலி தடைசெய்யப்படும் ட்ரம்ப் அறிவித்தார். அதனை வலிமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று டிக்டாக் கூறியுள்ளது. பின்னர் அவர், அந்தக் கெடுவை 90 நாட்களுக்கு நீட்டித்தார்.
"ட்ரம்ப் நிர்வாகம் உண்மைகளில் கவனம் செலுத்தவில்லை. தனியார் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் தலையிட முயன்றது. சட்டத்தின் விதி நிராகரிக்கப்படவில்லை என்பதையும், எங்கள் நிறுவனம் மற்றும் பயனர்கள் நியாயமான முறையில் நடத்தப்படுவதையும் உறுதி செய்வதற்காக, நீதித்துறையின் மூலம் தடை ஆணையை எதிர்ப்பதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை" என்று குறிப்பிட்டுள்ளார் டிக்டாக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர்.
சீனாவின் பைட்டேடான்ஸ் என்ற நிறுவனத்திற்கு டிக்டாக் செயலி சொந்தமானது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் டிக்டாக் செயலியை நிர்வகிப்பதற்கான உரிமையைப் பெறுவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் விரும்பியது குறிப்பிடத்தக்கது