அமெரிக்காவில் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருக்கும் டிக்டாக் வியாபாரம் நாளை முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சீன நிறுவனமான பைட்டான்ஸ் லிமிடெட் தயாரிப்பான டிக்டாக் செயலிக்கு இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளன. இதனால் டிக்டாக் செயலியை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் விற்பனை செய்ய பைட்டான்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை ஏலத்தில் எடுப்பதற்காக உலக பணக்கார நிறுவனங்கள் பலவும் ஆர்வம்காட்டி வருகின்றன.
குறிப்பாக உலகின் முதல் பணக்கார நிறுவனமான அமேசானை பின்னுக்குதள்ளும் முனைப்பில் டிக்டாக் செயலியை வாங்குவதற்கு வால்மார்ட் நிறுவனம் முயற்சித்து வருகிறது. இதற்காக மைக்ரோசாஃப் நிறுவனத்துடன் வால்மார்ட் நிறுவனம் கைகோர்த்துள்ளது. டிக்டாக் செயலியை 20 பில்லியன் டாலர் முதல் 30 பில்லியன் டாலர் வரை விற்பனை செய்ய பைட்டான்ஸ் முடிவு செய்துள்ள நிலையில், யாருக்கு செயலியை விற்கப்போகிறது என இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் டிக் டாக் வியாபாரம் இந்த வாரத்தில் முடிவுக்கு வந்துவிடும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக நாளையே டிக் டாக் விவகாரத்தில் முடிவு எட்டப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
டிக் டாக்கை மைக்ரோசாப்ட் மற்றும் வால்மார்ட் ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நெட்பிலிக்ஸ், ஆப்பிள், ஆல்பபெட் உள்ளிட்ட நிறுவனங்களும் டிக் டாக்கை வாங்க முயற்சிப்பதாக தெரிகிறது.