பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை... தமிழர்கள் போராட்டமும் அதிர்வலையும்!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை... தமிழர்கள் போராட்டமும் அதிர்வலையும்!
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை... தமிழர்கள் போராட்டமும் அதிர்வலையும்!
Published on

தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் பௌத்த மயமாக்கல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கம், மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான எழுச்சிப் போராட்டம் கடந்த 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், வடக்கு மாகாண மத அமைப்புக்கள், ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். கிழக்கு மாகாணத்திலுள்ள பொத்துவில் பகுதியில் கடந்த 3-ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி, கிழக்கு மாகாணம் முழுவதும் கடந்து, வடக்கு மாகாணம் வரை பயணித்தது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி தொடங்கிய நாள் முதல் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவுகளை பெற்று பேரணியை தடுக்க முற்பட்டனர். ஆனால், அவர்களின் எண்ணங்களை தவிடுபோடியாக்கி, ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிதும் சலனமில்லாமல், தொடர்ந்து வெற்றிகரமாக பேரணியை நடத்தி முடித்துள்ளனர்.

இந்தப் பேரணியின் ஒரு பகுதியாக, முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் நடந்த இடத்திற்கு சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு தீபம் ஏற்றி, யுத்தத்தில் உயிர் நீக்க உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை அதே இடத்தில் மீண்டும் நிறுவதற்கான மணலை அங்கிருந்து மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். தமிழர்கள், முஸ்லிம்கள் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தின் இறுதி நாளன்று யாழ்ப்பாணத்தில் மாபெரும் கூட்டமொன்று நடத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்களை அதிக அளவில் காண முடிந்தது.

ஏன் இந்தப் போராட்டம்?

பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்தப் பேரணிக்கு என்ன காரணம் என்பது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், "கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் எங்கள் சுய நிர்ணய உரிமையை பெற போராடிக்கொண்டு வருகிறோம். தமிழர்களாகிய நாங்கள் இலங்கையின் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைந்த நிலப்பரப்பை தாயகமாக கொண்ட தேசிய இனம். எங்களது இந்தப் பிறப்புரிமை தொடர்ச்சியாக மறுதலிக்கப்பட்டு வருகிறது.

எங்களை அடக்கி ஆளவேண்டும் என்பதில்தான் இலங்கை அரசு குறிக்கோளாக இருக்கிறது. பேரினவாத இலங்கை அரசு, தமிழர்கள் மீதான இன அழிப்பை தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது முதல் இன்று வரை எங்கள் உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம். வன்முறை கொண்டு எங்களை அடக்க பார்த்ததின் விளைவாக ஆயுதப் போராட்டத்துக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.

இரக்கமற்ற பேரினவாத இலங்கை அரசினால் கொத்துக்கொத்தாக எங்கள் தமிழ் உறவுகள் கொல்லப்பட்டனர். யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்தச் சூழலிலும், இலங்கை அரசு தமிழர்களின் கலாசார - பண்பாட்டு அடையாளங்களை அழித்து வருகிறது. தமிழ் தேசியத்தை சிதைவடையச் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஈழத் தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்ய வேண்டும் எனபதுதான் பேரினவாத இலங்கை அரசின் ஒரே குறிக்கோள்.

அதன் ஒருபகுதிதான் பௌத்த மயமாக்கல் மற்றும் தமிழர்கள் நிலங்களை ஆக்கரமித்து சிங்கள குடியேற்றத்தை அனுமதிக்கும் அராஜக போக்கு. வட கிழக்கில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் ஆலயங்கள் கையக்கப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில், பௌத்த விகாரங்கள் அமைக்கப்படுகின்றன. இப்படியான பௌத்த, சிங்களமயமாக்கள் உடனடியாக நிறுத்தபட வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்.

மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல், மனித உரிமை மீறல், அடக்குமுறைகள் கைவிடப்பட வேண்டும். தமிழர்களின் பூர்விக நிலங்களில் வனங்கள் அழித்தொழிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் அமைக்கும் தமிழர் விரோத நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். அதேபோல தமிழர்களின் நினைவேந்தல் உரிமைகளை தொடர்ச்சியாக மறுதலிக்கும் வகையில், நினைவுத் தூபிகள், அடையாளங்களை அழிக்கும் நடவடிகைகளை கைவிட வேண்டும்.

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை பயன்படுத்தி, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட இளைஞர்களை கைது செய்வது, இஸ்லாமியர்களின் மத ரீதியான பாரம்பரிய சடங்குகளாள ஜனாசாக்களை புதைக்கும் செயல்களை தடுப்பது உள்ளிட்டவற்ற சிங்கள பௌத்த பேரினவாத இலங்கை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்" என்றனர் போராட்டக்காரர்கள்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் உரிமைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், சர்வதேச அரங்கில் கவனம் ஈர்த்துள்ள இந்த அமைதிப் போராட்டம், இலங்கை அரசை சற்றே அசைத்துப் பார்த்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com