பாலியல் சர்ச்சை தொடர்பாக இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படாது என நோபல் பரிசுக் குழு
தெரிவித்துள்ளது.
நோபல் பரிசு தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் பல காலமாக இருந்து வருகிறது. அதில் கணிதத்துக்கு என்ற துறையை ஏற்படுத்தாமல் இருப்பது. மேலும், மகாத்மா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது ஆகியவற்றை முக்கிய சர்ச்சைக்குறிய விஷயங்களாக சொல்லலாம். இந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு காரணமாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
1901-ஆம் ஆண்டுமுதல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதில் இருந்து நோபல் கமிட்டி சந்தித்திருக்கும் மிகப்பெரிய
சர்ச்சையாக இது பார்க்கபடுகிறது. இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு குழுவில் உள்ள ஒரு பெண் உறுப்பினரின் கணவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நம்பகத் தன்மை குறைந்திருப்பதால் பரிசு வழங்கும் சூழல் இல்லை என இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குழு அறிவித்திருக்கிறது. எனவே சர்ச்சை காரணமாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்னர் போர்கள் மற்றும் தகுதியான நபர் இல்லை என்பன போன்ற காரணங்களுக்காக 6 முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான பரிசு அடுத்த ஆண்டில் வழங்கப்படும் என்றும் நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.