ஈரான் ராணுவப் படைத் தளபதி சுலைமானியின் இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாக்தாத் நகரில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் குவாசிம் சுலைமானி, ஈரான் ஆதரவுடன் ஈராக்கில் செயல்படும் படைப் பிரிவின் துணைத் தலைவர் அபு மஹ்தி அல் முகாந்திஸ் மற்றும் முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட குவாசிம் சுலைமானி, ஈரானில் ஒரு ஹீரோவைப் போல போற்றப்படுபவர். அரசுக்கு மிக நெருக்கமானவர்.
தற்போது முக்கிய தளபதியை பறிகொடுத்துள்ள ஈரான், அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளது. அமெரிக்காவின் செயல் முட்டாள்தனமானது என்று கூறியுள்ள ஈரான் அரசு, இதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதனிடையே அதிபர் ட்ரம்பின் உத்தரவின் பேரிலேயே குவாசிம் சுலைமானியை கொன்றதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் விளக்கியுள்ளது. பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலை குவாசிம் சுலைமானிதான் திட்டமிட்டார் என்றும் பல அமெரிக்கர்கள் உயிரிழப்புக்கு இவர் காரணமாக இருந்துள்ளார் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சுலைமானி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்குப் பல ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப் பகுதியில் குவிந்தனர். இதனையடுத்து, தெற்கு ஈரானில் உள்ள கெர்மான் நகரில் சுலைமானிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இறுதி ஊர்வலத்தில் லட்சணக்கான மக்கள் திரண்டனர். சுமார் 10 லட்சம் பேர் அதில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால், அந்தப் பகுதியே மக்கள் வெள்ளம் போல் காட்சியளித்தது.
இந்நிலையில், ஈரான் ராணுவப் படைத் தளபதி சுலைமானியின் இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், 48 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தி அசோஷியேட் பிரஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இறுதி ஊர்வலத்திற்குப் பின் ஏராளமானோர் அங்கு உயிரிழந்த நிலையில சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.