ரஷ்யா -உக்ரைன் இடையே நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என இருதரப்பும் தெரிவித்துள்ளன. எனினும் போர்முனையிலிருந்து வெளியேறுவோருக்கான பாதைகளை செயல்படுத்துவதில் இருதரப்பிலும் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாதுகாப்பான வழித்தடங்களை செயல்படுத்துவது குறித்து சில முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மிக்கேய்லோ தெரிவித்தார். இரு தரப்புக்கும் இடையில் சண்டையை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடரும் எனவும் அவர் கூறினார்.
மனிதாபிமான அடிப்படையில் மக்கள் வெளியேறுவதற்கான பாதைகள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் என ரஷ்யாவின் தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட விளாடிமிர் மெடின்ஸ்கி கூறியுள்ளார். அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையில் ரஷ்யா- உக்ரைன் இடையேயான சண்டையை பேச்சுவார்த்தை மூலம் நிறுத்துவதற்கு பல வாரங்கள் ஆகலாம் என அவர் கூறியுள்ளார். பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு முன் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மறுத்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.