`ப்ரோ எப்படி இருக்கீங்க? உங்க லேப்டாப்பை நான் திருடிட்டேன்’- திருடனின் பாவமன்னிப்பு மெயில்

`ப்ரோ எப்படி இருக்கீங்க? உங்க லேப்டாப்பை நான் திருடிட்டேன்’- திருடனின் பாவமன்னிப்பு மெயில்
`ப்ரோ எப்படி இருக்கீங்க? உங்க லேப்டாப்பை நான் திருடிட்டேன்’- திருடனின் பாவமன்னிப்பு மெயில்
Published on

லேப்டாப்பை திருடிவிட்டு, உரிமையாளருக்கு மன்னிப்பு கேட்டு மெயில் அனுப்பிய திருடனின் செயல் இணையத்தில் வைரலாகி உள்ளது.

திருட்டு சம்பவம் நடக்கும் போது, திருடிய இடத்திலேயே திருடன் தூங்கிவிடுவது, சாப்பிடுவது, வெளிவர முடியாமல் மாட்டிகொள்வது போன்ற சுவாரசியமான சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். லேப்டாப்பை திருடிவிட்டு உரிமையாளருக்கு மெயில் அனுப்பும் சம்பவம் இதற்கு முன்பு பல நாடுகளில் நடந்துள்ளன.

அந்த வகையில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஸ்வேலி திக்சோ என்பவரது லேப்டாப்பை திருடிய திருடன், ’ ப்ரோ, எப்படி இருக்கீங்க? என் அவசர தேவைக்காக உங்கள் லேப்டாப்பை நான் திருடிவிட்டேன்’ என உரிமையாளருக்கு மெயில் அனுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது. ஸ்வேலி திக்சோ என்பவரின் லேப்டாப் சில தினங்களுக்கு முன் திருடு போய் உள்ளது. திருடப்பட்ட லேப்டாப்பில் தனிப்பட்ட தகவல்கள் உள்பட பல முக்கிய தகவல்கள் லேப்டாப்பில் இருந்ததால், அவர் கவலையில் என்ன செய்வது என தெரியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.

அப்போது அவருக்கு ஒரு மெயில் வந்துள்ளது. அதில், 'ப்ரோ, எப்படி இருக்கீங்க? உங்கள் லேப்டாப்பை நான் நேற்று திருடிவிட்டேன். எனது தேவைகளை பூர்த்தி செய்ய எனக்கு பணம் தேவைப்பட்டது. நீங்க ஆராய்ச்சி பணிகளில் மும்முரமாக இருப்பதை நான் பார்த்தேன். அதனால், அது தொடர்பான ஃபைல்களை இதில் இணைத்து அனுப்பியுள்ளேன். உங்களுக்கு வேறு எதாவது தேவையான முக்கிய ஃபைல்கள் இருந்தாலும் திங்கள் கிழமை நண்பகலுக்குள் தெரியப்படுத்துங்கள். ஏனென்றால் லேப்டாப்பை விற்பதற்கு எனக்கு ஒரு கஸ்டமர் கிடைத்துவிட்டார். மன்னித்துவிடுங்கள்" என்று அனுப்பி உள்ளார்.

தனது மெயிலை பயன்படுத்தி தனக்கே அனுப்பிய மெயிலை டிவிட்டரில் பகிர்ந்த ஸ்வேலி திக்சோ, ‘ எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. குழப்பமான மனநிலையில் உள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்களும், ‘ நல்ல திருடன்’ என திருடியவருக்காக அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.


இதனை தொடர்ந்து, அதே மெயில் மூலம், ‘`எனது லேப்டாபை கொடுத்துவிடு. உனக்கு நான் ரூ. 4000 தருகிறேன் என ஸ்வேலி திக்சோ கேட்டதும், அதற்கு பதிலளித்த திருடன், ‘ என்னை கைது செய்ய பார்க்குறீங்களா? நீங்கள் சொல்வதை நான் நம்புவேன் என நினைக்கிறீங்களா? சரி. எனக்கு ரூ. 5000 வேண்டும். நான் சொல்லும் இடத்துக்கு வாருங்கள். அங்கு எதாவது ஒரு இடத்தில் போலீஸை நான் பார்த்தால், அதுவே நான் உங்களுக்கு அனுப்பும் கடைசி மெயிலாக இருக்கும்’’ என தெரிவித்துள்ளார். ஸ்வேலி திக்சோ, அந்த திருடனிடமிருந்து, லேப்டாப்பை பெற்றா என்பது குறித்த தகவலை ஸ்வேலி இன்னும் தெரியப்படுத்தவில்லை. இதனால் பலரும் `அடுத்து என்ன நடந்தது ப்ரோ!’ என சுவாரஸ்யமாக கேட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com