அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியலமைப்பு மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார் இம்ரான்கான்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதில் இம்ரான்கானின் வலது காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இம்ரான் கானுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் தன்மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள இம்ரான் கான், ''மருத்துவர்கள் எனது வலது காலில் இருந்து மூன்று துப்பாக்கிக் குண்டுகளை அகற்றினர். இடதுகாலில் சில துப்பாக்கிக்குண்டின் துகள்கள் இருந்தன. மூன்றரை ஆண்டுகள் நான் ஆட்சியில் இருந்ததை நினைவில் கொள்ளுங்கள். உளவுத்துறை அமைப்புகளுடன் எனக்கு தொடர்பு உள்ளது. என்னை கொலை செய்யும் திட்டம் இரண்டு மாதங்களுக்கு முன்பே தீட்டப்பட்டிருந்தது. எனது கட்சி உடைந்துவிடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு பதிலாக நடந்தது வேறு. எங்களுக்கு மக்கள் ஆதரவு பன்மடங்கு பெருகியிருக்கிறது'' என்று கூறினார்.
முன்னதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்விக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார் இம்ரான் கான். அக்கடிதத்தில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியலமைப்பு மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிபரை கேட்டுக் கொண்டார். மேலும் அந்த கடிதத்தில் இம்ரான்கான், ''எந்தவொரு நபரும் அல்லது அரசு நிறுவனமும் நாட்டின் சட்டத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது. அரச பயங்கரவாதத்தால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை சித்திரவதைகள் மற்றும் கடத்தல்கள் அனைத்தும் தண்டனையின்றி நடத்தப்படுகின்றன. நீங்கள் மிக உயர்ந்த பதவியை வகிக்கிறீர்கள். ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்யும் வகையில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியலமைப்பு சட்ட மீறல்களை களையுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்கலாமே: இம்ரான்கான் தலைமையில் பிரம்மாண்ட பேரணி - வன்முறை களமாக மாறிய இஸ்லாமாபாத்