பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது.
வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மேவுக்கு ஆதரவாக 200 பேரும், எதிராக 117 பேரும் வாக்களித்தனர். இதனை அடுத்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற மே, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பணிகளை முனைப்புடன் மேற்கொள்வார் எனத் தெரிகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என தெரசா மே தனது கட்சி உறுப்பினர்களுக்கு வாக்குறுதி தந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ள நிலையில் அடுத்த ஓர் ஆண்டுக்கு தலைமைப் பதவியில் அவர் தொடர்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. அதே வேளையில், பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு அவரது கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவது என்பது அத்தனை சுலபமாக இருக்காது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.