பதவியில் இருந்து விலகப் போவதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான உடன்பாட்டுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற முடியாமல் போனதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வரும் ஜூன் 7-ஆம் தேதி கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு பதவியேற்ற தெரசா மே, பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராவார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக அவர் செய்து கொண்ட பிரெக்ஸிட் உடன்பாட்டை பிரிட்டன் நாடாளுமன்றம் மூன்று முறை நிராகரித்திருக்கிறது.
சொந்தக் கட்சி எம்பிக்களில் பலரும் தெரசா மேயின் உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவர் பதவி விலகுவதைத் தொடர்ந்து, போரிஸ் ஜான்சன், எஸ்தர் மெக்வே, ரோரி ஸ்டூவர்ட் ஆகியோரில் ஒருவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.