அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசா விதிமுறையில் புதிய மாற்றம் செய்யப்பட உள்ளது.
அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவிலுள்ள மக்களின் பணிவாய்ப்பு குறைவதாக் கூறி அந்தத் தடையை அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. பின் குறிப்பிட்ட சில வரையறைகளுடன் மீண்டும் ஹெச்1பி விசாவிற்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவில் ஹெச்1பி விசா பணியாளரின் மனைவிக்குப் பணி புரியும் அங்கீகாரம் வழங்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெள்ளை மாளிகைக்கு ஒரு பரிந்துரையை வழங்கியுள்ளது. அந்தப் பரிந்துரையை அதிபர் ஏற்கும் பட்சத்தில் அமெரிக்காவில் பணிபுரியும் நபரின் மனைவி அல்லது கணவர் அங்கு பணிபுரிவதற்கு அரசு அங்கீகாரம் இல்லாத நிலை ஏற்படும்.
இதனால் அமெரிக்காவிலுள்ள சுமார் 90 ஆயிரம் வெளிநாட்டு குடும்பங்கள் பாதிக்கப்படும். அதில் பெரும்பாலானவர்கள் இந்தியக் குடும்பங்களாக இருக்கும் என்பதால் அதற்கு எதிர்ப்புகளும் இருக்கின்றன.
மேலும் ஹெச்1பி விசா பெற்றவர்களின் மனைவிக்கு பணி அங்கீகாரம் மறுக்கப்படும் பட்சத்தில் அமெரிக்காவிலுள்ள திறமையான பணியாளர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற நேரிடும். இது அமெரிக்காவுக்குத்தான் இழப்பு என கமலா ஹாரிஸ் உள்ளிட்ட எம்பிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.