கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக வழக்கத்தைவிட கூடுதலாக 10 லட்சம் காசநோய் பாதிப்பு ஏற்படும் என வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிசைன் டிசைனாக கொரோனா வைரஸ் உருமாறியது, மிரட்டிய உயிர் பலிகள், வேலையிழப்புகள், பொருளாதார சரிவு, தொழில் முடக்கம் என 2020-ம் ஆண்டு துயரத்தை அள்ளித் தந்துவிட்டு சென்றிருக்கிறது. இதே கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவு இன்னொரு துயரத்துக்கு வழிவகுத்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 10 லட்சம் கூடுதல் காசநோய் பாதிப்புகளை உலகம் காணக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டளவில் காசநோய் அகற்றுவதற்கான இலக்கை இந்தியா வைத்திருந்தது. ஆனால், தற்போது நிலவி வரும் கொரோனா பரவல் அந்த இலக்கை அடைய முடியாமல் வைக்கும் எனவும், கொரோனா காரணமாக உலகம் முழுவதும் காசநோய் பாதிப்பில் 10 லட்சம் அதிகரிப்பு இருக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) முன்னாள் இயக்குநருமான டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ``கொரோனா காரணமாக லாக்டவுன் மற்றும் பிற கட்டுப்பாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவுக்கு வழிவகுத்துள்ளன. உற்பத்தி சரிவு ஊட்டச்சத்து குறைபாட்டை அதிகரிக்கும். ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக ஆண்டுக்கு 10 லட்சம் மக்கள் காசநோயால் பாதிக்கப்படக்கூடும். கொரோனா பரவலால் காசநோய் அறிவிப்பு 50 முதல் 60% வரை குறைந்தது, இது எதிர்காலத்தில் அதிக நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும்.
இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் 20 லட்சத்து 69 ஆயிரம் காசநோய்கள் பதிவாகின. இது உலகளாவிய நோய்த்தொற்றின் 26% ஆகும். இதனால் காசநோயை அகற்றுவதற்கான இலக்கை இந்தியா நிர்ணயித்திருந்தது. அதன்படி, 2025 ஆம் ஆண்டளவில் 1,00,000 பேருக்கு ஒருவர் வீதம் கட்டுப்படுத்த திட்டங்கள் வரையறுக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் 2025-க்குள் காசநோய் முடிவுக்கு வருவதற்கான இந்தியாவின் இலக்கை நிச்சயமாக பாதித்துள்ளது.
எனினும், கொரோனா தொற்றுநோய் பல படிப்பினைகளை வழங்கியுள்ளது. காசநோயை அகற்றுவதற்கான இலக்கை நிலைநிறுத்த நாட்டிற்கு உதவ புதுமையான தீர்வுகளைக் காண தனியார் துறையுடன் ஒத்துழைப்புகள் பயன்படுத்தப்படலாம். கோவிட்-19 சவால்களை எதிர்கொள்ள நிறைய கண்டுபிடிப்புகள் இருந்தன. இந்தப் புதுமைகளில் பலவும் காசநோய்களுக்கு நாவல் சோதனை முறைகள்(novel testing methods), தொடர்பு தடமறிதல் பயன்பாடுகள், தடுப்பூசி சோதனை தளங்களை உருவாக்குதல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்" என்று அவர் கூறியுள்ளார்.
காசநோய் உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி மக்களை பாதிக்கிறது. 10 லட்சத்து 40 ஆயிரம் பேர் மரணத்திற்கு காசநோய் முக்கிய காரணியாக அமைகிறது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை இறப்புகளை மேலும் அதிகப்படுத்தும் என அச்சம் வெளியாகியுள்ளது.