ஈஸ்டர் பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையில் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் உள்பட 35 வெளிநாட்டினரும் கொல்லப்பட்டனர். காயமடைந்த 500-க்கும் அதிகமானோர், பல்வேறு மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. 9 பேர் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஷியொன் தேவாலயத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த ரமேஷ் ராஜூ என்பவர் தீவிரவாதியை தடுத்து நிறுத்தியதால் நூற்றுக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டதாக அவரது மனைவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கட்டிட ஒப்பந்தக்காரரான ரமேஷ் ராஜூவுக்கு ஜிரிஷாந்தினி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஜிரிஷாந்தினி ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஷியொன் தேவாலயத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். குண்டு வெடிப்பு நடந்த அன்றும் தன்னுடைய குழந்தைகளுடன் சேர்த்து பல குழந்தைகளுக்கும் தேவாலயத்தில் பாடம் எடுத்துள்ளார் ஜிரிஷாந்தினி.
சிறிது நேரம் கழித்து ஜிரிஷாந்தினியும் குழந்தைகளும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்காக வெளியே சென்றுள்ளனர். அப்போது பெரிய முதுகுப்பையுடன் ஒருவர் தேவாலயத்தில் நுழைந்துள்ளார். அவரைக் கண்ட ஜிரிஷாந்தினியின் கணவர் ரமேஷ் ராஜூ, அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். பையினுள் கேமராக்கள் இருப்பதாகவும் சர்ச்சை படம் பிடிக்க உள்ளே போவதாகவும் தீவிரவாதி தெரிவித்துள்ளார். ஆனால் அவரை அனுமதிக்காத ரமேஷ் ராஜூ அவரை வெளியே அனுப்பியுள்ளார். அப்போதே வெடிகுண்டு வெடித்துள்ளது.
இது குறித்து பேசிய ஜிரிஷாந்தினி, ''என் கணவர் எதையோ தவறாக உணர்ந்துள்ளார். அதனால் முதுகுப்பையுடன் வந்தவரை தடுத்து நிறுத்தினார். ஒருவேளை அந்த வெடிகுண்டு தேவாலயத்துக்குள் வெடித்து இருந்தால் 400க்கும் மேற்பட்டவர்கள் கூட இறந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் என் கணவர் தடுத்து விட்டார். வெடிகுண்டு சத்தம் கேட்டதும் மக்கள் நான்குபுறமும் சிதறி ஓடினர். கட்டடம் பற்றி எரிந்தது. நான் என் கணவரை தேடினேன். அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விசாரித்தேன். அங்கு இறந்துபோன கணவரை மட்டுமே என்னால் கண்டுபிடிக்க முடிந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.