வெனிசூலாவைச் சேர்ந்த உலகின் மிகவும் வயதான மனிதர், நாளை தனது 113 ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட ஆர்வத்துடன் காத்திருக்கிறார். வெனிசூலாவைச் சேர்ந்த ஜூவான் விசென்ட் மோரா (Juan vicente Mora) என்பவர் பெரெஸ் மோரா மற்றும் எடெல்மிரா மோரா தம்பதியருக்கு 9வது குழந்தையாக 1909 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி பிறந்தார்.
தனது 112 ஆவது வயதை வெற்றிகரமாகக் கடந்து, உலகின் மிகவும் வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 11 குழந்தைகள், 41 பேரப்பிள்ளைகள், 18 கொள்ளு பேரப்பிள்ளைகள், 12 எள்ளுப் பேரப்பிள்ளைகள் என தனது வம்சம் வாழையடி வாழையாகத் தழைத்திருப்பதைப் பார்த்து பார்த்து பூரித்து வருகிறார்.
நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்னவென்று கேட்டபோது, “கடினமாக உழைக்கவும். விடுமுறை நாட்களில் ஓய்வெடுக்கவும். தினமும் சீக்கிரம் தூங்கச் செல்லவும். கடவுளை நேசிக்கவும். அவரை எப்போதும் உங்கள் இதயத்தில் சுமந்து செல்லவும்” என்கிறார் மோரா.
வயது மூப்பின் காரணமாக மோரா அவர்களின் செவித்திறன் ஓரளவு குறைந்துள்ளது. சக்கர நாற்காலியில் தான் வலம் வருகிறார். இதுதவிர வேறு எந்த பிரச்னையும் இன்றி ஆரோக்கியமாகத் திகழும் மோரா தாத்தா, நாளை தனது 113 ஆவது பிறந்த நாளுக்கு கேக் வெட்ட தயாராகிவிட்டார்.