உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்கி உள்ள நிலையில், அவரை எதிர்த்து, குடியரசுக் கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் களமிறங்கி உள்ளார். பல்வேறு மாகாணங்களில், இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என கருத்துக்கணிப்புகள் வந்துள்ள நிலையில், தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் மாகாணங்களில், பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, விஸ்கான்சின் மாகாணம் க்ரீன் பே பகுதியில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் பேரணியில் உரையாற்றிய ட்ரம்ப், தனது ஆதரவாளர்களை குப்பைகள் என விமர்சித்ததாகக்கூறி ஜோ பைடனை கடுமையாகச் சாடினார். தூய்மைப் பணியாளர்கள் அணியும் உடையை அணிந்துகொண்டு பேரணியில் பங்கேற்ற ட்ரம்ப், அமெரிக்கர்கள் மீது அன்பு செலுத்தாமல் அமெரிக்காவை வழிநடத்த முடியாது என்றும், அமெரிக்க அதிபராகும் தகுதி கமலா ஹாரிசுக்கு துளியும் கிடையாது என்றும் கூறினார்.
எனினும், ஜோ பைடனின் பேச்சுக்கு முரண்பட்ட கமலா ஹாரிஸ், யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை வைத்து ஒருவரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜோ பைடனின் பேச்சுக்கு கமலா ஹாரிசே எதிர்ப்பு தெரிவித்துள்ளது, அவரின் தனிப்பட்ட கொள்கைகளை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.