உலக சுகாதார நிறுவனம் உடனான தொடர்பை துண்டித்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்
கொரோனா என்ற வார்த்தை முதலில் ஒலிக்கத் தொடங்கிய இடம் சீனா. ஆனால் அங்கு பாதிப்புகள் குறைவு. தொற்று பரவிய அமெரிக்கா
கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் சீனா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து
வருகிறார்.
அதேபோல் உலக சுகாதார அமைப்பின் மீது அதிபர் ட்ரம்ப் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். பெரும் தொற்று குறித்து போதுமான எச்சரிக்கை செய்யவில்லை, சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது போன்ற குற்றச்சாட்டுகள் அவை. இதற்கிடையே உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை பெருமளவுக்கு குறைக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்துடனான தொடர்பை துண்டித்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு உதவுவதாக புகார் கூறி வந்த நிலையில், WHO லிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பை சீனா முழுக்கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வெளிப்படையாக இயங்க வேண்டுமென நாங்கள் உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை என தெரிவித்துள்ளார்