அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போதைய கருத்துக்கணிப்பில்கூட, கமலா ஹாரிஸே முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ”உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது” என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருப்பது உலக நாடுகளை உற்றுநோக்கச் செய்திருக்கிறது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ”உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் தூங்குமூஞ்சி [sleepy] ஜோ பைடன் கலிபோர்னியா பீச்சில் தூங்கிக்கொண்டு இருக்கிறார். கட்சியினரால் ஜோ புறக்கணிக்கப்பட்டுவிட்டார். காம்ரேட் கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் சகாக்களுடன் பஸ்சில் டூர் சென்று கொண்டிருக்கிறார்” என அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று இஸ்ரேலின் வடக்கு, மத்திய பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு 320 ஏவுகணைகளை சரமாரியாக வீசியது. 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் பகுதிகள் மீது குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து, இஸ்ரேலில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. கடந்த மாதம் ஹிஸ்புல்லா உயர்மட்ட தலைவர் ஃபவத் ஷுக்ர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல் தொடுத்துள்ளதாக ஹிஸ்புல்லா தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இதைவைத்தே, ‘உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், அது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ள’தாகவும் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் மற்றும் இஸ்ரேல்- பாலஸ்தீன போர் ஆகிய நாடுகளுக்கிடையேயான போரில் உலக நாடுகள் சில, இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கின்றன. இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு மேற்குலகம் ஆதரவு அளித்து வருவதுபோல், பாலஸ்தீனத்துக்கு மத்திய கிழக்கு நாடுகளும், ரஷ்யாவுக்கு சீனா, வடகொரியா ஆகியவை ஆதரவாக நிற்கின்றன.