ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி ரஷ்ய அதிபரை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது சீனா, இந்தியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 8 உறுப்பினா்களை கொண்டதாகும். இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019-ம் ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அதன் பிறகு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெறவில்லை.
உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான இந்த அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தானின் சமா்கண்ட் நகரில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மாநாட்டையொட்டி சமர்கண்ட் நகரின் முக்கிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. உறுப்பு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் உஸ்பெகிஸ்தான் புறப்பட்டு சென்றார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ.) நாடுகளின் தலைவர்கள் கவுன்சிலின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் நான் சமர்கண்டிற்குச்செல்கிறேன். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் விரிவாக்கம், பன்முக மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் பற்றிய கருத்துக்களை அமைப்புக்கு உட்பட்டு பரிமாறிக் கொள்வதை நான் எதிர்நோக்குகிறேன்.
உஸ்பெக் தலைமையின் கீழ், வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. சமர்கண்டில் ஜனாதிபதி மிர்சியோயேவை சந்திக்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். 2018-ல் அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்ததை நான் அன்புடன் நினைவு கூர்கிறேன். 2019-ஆம் ஆண்டு எழுச்சிமிகு குஜராத் உச்சிமாநாட்டின் கௌரவ விருந்தினராகவும் அவர் கலந்து கொண்டார். மேலும், உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் சில தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளேன்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தான் புதிய அதிபரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது
- விக்னேஷ்முத்து.