சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு லடாக்கின் கிழக்குப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.
மே மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே எல்லைப் பகுதிகளில் ஆங்காங்கே அத்துமீறத் தொடங்கியது சீனா. இந்தியப் பகுதிக்குள் முன்னேறி வந்த சீன நாட்டு வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு இல்லை; பெரிய தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை. ஆயினும் சீன வீரர்கள் கற்களை வீசி ஆவேசமாகத் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் உருவானது. நான்கு நாள்களுக்குப் பிறகு சிக்கிமை ஒட்டிய எல்லைப் பகுதியிலும் இதேபோன்ற மோதல் ஏற்பட்டது. அண்மையில் இந்திய ராணுவத் தளபதி மனோஜ் ராவனே லடாக்கில் உள்ள படை முகாமுக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார். சீன வீரர்களின் அத்துமீறல்களை இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை இது காட்டியது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உருவாக்கப்பட்ட மேக்மோகன் சர்வதேச எல்லைக்கோடு சீனாவால் பின்பற்றப்படவில்லை. 1962 ஆம் ஆண்டு போருக்குப் பிறகு படைகளின் நிலைகளைக் குறிக்கும் வகையிலான கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டையே இரு நாடுகளும் ராணுவ ரீதியில் ஒப்புக்கொண்டு பயன்படுத்தி வருகின்றன. இதையும் பல நேரங்களில் சீன வீரர்கள் மதிப்பதில்லை. இந்தியப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது அவ்வப்போது நடந்துகொண்டே இருக்கின்றன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு செல்லும் ஒரே நீர்நிலையான பாங்காங் ஏரியும் அவ்வப்போது மோதலுக்குக் களமாகிறது. தற்போது எல்லைக் கோட்டின் இருபகுதிகளிலும் ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்றன. தொடக்கத்தில் எல்லைக்கோட்டை ஒட்டிய பகுதிகளில் மிக வேகமாக படைகளைக் குவித்ததுடன் சாலை உள்ளிட்ட ராணுவக் கட்டமைப்புகளையும் சீனா வலுப்படுத்தி வந்தது.
இந்தியாவும் சாலைகள், பாலங்கள், முகாம்கள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி பதிலடி கொடுத்து வருகிறது. இந்தக் கட்டமைப்புகளில் முக்கியமானது லடாக்கின் மையப் பகுதியில் இருந்து கட்டுப்பாட்டு எல்லைக் கோடு வரையிலான 255 கிலோ மீட்டர் சாலை. லே நகரில் இருந்து, டர்புக், ஷியோக் வழியாக தவ்லத் பெக் ஓல்டி என்ற சீன எல்லையை ஒட்டிய பகுதி வரைக்கும் இந்தச் சாலை நீண்டிருக்கிறது. இந்தச் சாலை வழியாக மிக எளிதாகவும் வேகமாகவும் படைகளை எல்லை வரை நகர்த்த முடியும். இதற்காக குறுகலான சாலைகள், பாலங்கள், உள்ளிட்டவற்றை இந்தியா ஏற்படுத்தியிருக்கிறது.
சீன எல்லையை ஒட்டியிருக்கும் தவ்லத் பெக் ஓல்டி என்பது உலகிலேயே மிக உயரமான விமான ஓடுதளம் இருக்கும் இடம். ஏன்என் 32 ரக விமானங்களை இந்தத் தளத்தில் இறக்கி இந்தியா தனது உத்திசார்ந்த வலிமையை வலுப்படுத்தியிருக்கிறது. லே நகரில் இருந்து இந்த விமானத் தளம் வரைக்கும் தற்போது சாலை வழியாகப் பயணிக்க முடியும். இந்தச் சாலையில் இருந்து கால்வான் ஆற்றுப் பகுதியில் ஒரு கிளைச் சாலையை இந்தியா அண்மையில் அமைத்தது. இதுவும் எல்லை வரை நீண்டிருக்கிறது.
இப்படி எல்லையை மிக எளிதாக அடைவதற்கான பல்வேறு கட்டமைப்புகளை இந்தியா ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாகவே சீனா எல்லைப்பகுதிகளில் அத்துமீறி வருவதாகக் கூறப்படுகிறது. சீனாவின் ராணுவ நடவடிக்கைகளின் நோக்கத்தை எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது. அதனால் எதற்கும் தயாராகவே இருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
உலகிலேயே மிக நீண்ட நில எல்லையைக் கொண்டிருக்கும் நாடு சீனா. இந்தியாவும் சீனாவும் சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீள எல்லையைக் கொண்டிருக்கின்றன. இந்த எல்லைக் கோடானது கிழக்கு, மத்திய, மேற்கு என மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இந்த எல்லையைப் பொருத்தவரை தற்போதைய லடாக், சிக்கிம் மாநிலம், அருணாசலப் பிரதேசம் ஆகியவை அவ்வப்போது பிரச்னைக்கு களங்களாக மாறிவிடுகின்றன.
இந்தியாவின் ஆட்சிக்குள்பட்ட அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பகுதிகளை தங்களுக்குச் சொந்தமானது என சீனா தொடர்ந்து பிடிவாதமாகக் கூறிவருகிறது. இதேபோல லடாக்கின் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருக்கும் சீனா அது தனது ஜின்ஜியான் மாநிலத்தின் அங்கம் எனக் கூறுகிறது. இது தொடர்பான மோதல் காரணமாகவே 1962-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பெரும் போர் நடந்தது.
இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பகுதிகளைக் கொண்டு, எல்ஏசி அல்லது LINE OF ACTUAL CONTROL என்ற எல்லை வகுக்கப்பட்டது. இதன் ஒரு பக்கத்தில் சீனா தனது ராணுவக் கட்டமைப்புகளை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. மறுபுறம் இந்தியாவும் சாலை உள்ளிட்ட கட்டமைப்புகளை வலுப்படுத்துகிறது. இந்தச் சாலைக்கும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கும் இடையே இருக்கும் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதி அவ்வப்போது மோதலுக்குக் களமாகிறது.