அமெரிக்காவில் நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற மெட் காலாவில் பங்கேற்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் வித்தியாசமான ஆடைகளில் அணிவகுத்தது காண்போரை வெகுவாகக் கவர்ந்தது.
வித்தியாசமான ஆடைகளில் அசத்திய நட்சத்திரங்கள் என உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, நியூயார்க்கில் நிகழ்ந்த மெட் காலா ஃபேஷன் ஷோ. நியூயார்க்கில் உள்ள பிரபல கலை அருங்காட்சியகத்திற்கு நிதி திரட்டுவதற்காக 1948ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த மெட் காலா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த வருடத்திற்கான ஃபேஷன் ஷோ கோலாகலாக நடத்தப்பட்டது. இதில் அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், பாப் பாடகர்கள் என உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றனர். ஒவ்வொரு வருடமும் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தீமிற்கு ஏற்றவாறு நட்சத்திரங்கள் ஆடைகள் அணிவகுப்பை நடத்துவர். அந்த வகையில் ஏராளமான பிரபலங்கள் வித்தியாசமாக ஆடைகளை அணிந்து அசத்தினர்.
மாடல் அழகிகளான கிகி , பெல்லா சகோதரிகளின் ஆடைகள் பெரிதும் கவனத்தை ஈர்த்தது. பிரபல ராப் இசைப் பாடகி புல்லாங்குழல் வாசித்தபடி அணிவகுத்தது நிகழ்ச்சியை மேலும் அழகாக்கியது. பேஷன் ஷோவில் இனிய நிகழ்வாக, நியூயார்க் நகரின் கலாசார விவகாரத் துறையின் ஆணையாளர் லாரி கம்போ மற்றும் பாபி டிஜி ஒலிசாவின் திருமண ஒப்பந்தம் நடைபெற்றது. லாரி கம்போவிற்கு மோதிரத்தை அணிவித்தபோது, அங்கிருந்தவர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளின்டன், நிகழ்ச்சியில் திடீரென தோன்றியதால் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். 20 ஆண்டுகளில் முதல்முறையாக மெட் காலாவில் கவுன் அணிந்து வந்து ஹிலாரி கிளின்டன் அசத்தினார். கொரோனா தடுப்பூசியில் முன்னணி வகிக்கும் இந்திய நிறுவனமான சீரம் இன்ஸ்டிடூயூட்டின் செயல் இயக்குநர் நடாஷா புனாவாலா, இந்திய கைவினைத் திறனை வெளிப்படுத்தும் வகையிலான ஆடையை அணிந்தது காண்போரை கவர்ந்தது. இதுபோன்ற ஏராளமான நட்சத்திரங்களின் ஆடை அணிவகுப்பு உலகளவில் பேசப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக, அமெரிக்க அதிபரின் மனைவியான ஜில் பைடன், ஆடைகளின் கண்காட்சியை பார்வையிட்டார்.
இதையும் படிக்கலாம்: 'முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய விருப்பம்' - மனம்திறந்த பில் கேட்ஸ்