விந்தணு தானம் மூலம் 550க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் டச்சுக்காரர் ஒருவருக்கு இனிமேல் விந்தணு தானம் வழங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜோனத்தான்(41), என்ற அந்த நபர் மீண்டும் விந்தணு வழங்க முன்வந்தால் அவருக்கு ரூ.90 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையானது கண்டறியப்பட்டதால் 2017ஆம் ஆண்டு நெதர்லாந்தில் உள்ள கருத்தரித்தல் மையங்களில் ஜோனத்தான் விந்தணு தானம் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு விந்தணு தானத்தை நிறுத்துவதற்கு பதிலாக அவர் வெளிநாடுகள் மற்றும் ஆன்லைனில் தனது விந்தணு விற்பனையை தொடங்கியிருக்கிறார்.
ஜோனத்தானின் விந்தணுவால் குழந்தைபெற்ற ஒரு தாய் தொடுத்த வழக்கின்பேரில், தான குழந்தைகள் உரிமையை பாதுகாக்கும் அறக்கட்டளையானது ஜோனத்தானை நீதிமன்றத்தில் நிறுத்தியது. இதனையடுத்து ஜோனத்தான் எந்தெந்த கருத்தரித்தல் மையங்களுக்கு தனது விந்தணுக்களை தானம் செய்திருக்கிறார் என்ற பட்டியலை வாங்கி அவை அனைத்தையும் அழிக்கும்படி தி ஹேக் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இந்த நபர் நூற்றுக்கணக்கான பெண்களை தவறாக வழிநடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
டச்சு மருத்துவ வழிகாட்டுதல்களின்படி, தானம் செய்யும் நபர் ஒருவருக்கு 12 குடும்பங்களில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கக்கூடாது. தவறுதலாக, ஒருவருக்கொருவர் அறியாமலேயே உடன்பிறந்தோரே குழந்தைகளுக்கு பெற்றோர் ஆவதை தடுக்க முடிந்தவரை தானம் செய்பவர் முடிந்தவரை அதை குறைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார். ஆனால் இந்த நபர் 2007ஆம் ஆண்டில் விந்தணு தானம் செய்யத் தொடங்கியதிலிருந்து இதுவரை 550 முதல் 600 குழந்தைகள் பிறப்புக்கு காரணமாகியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜோனத்தான் வருங்காலத்தில் பெற்றோர் யாரையும் தொடர்புகொள்ள கூடாது எனவும், தானத்திற்கு உதவும் எந்த நிறுவனத்துடனும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்திருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு எதிர்மறையான உளவியல் விளைவுகள் ஏற்படலாம் எனவும் கூறியுள்ளது.
நெதர்லாந்தில் கருவுறுதல் ஊழல்கள் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு டச்சு கருத்தரித்தல் மருத்துவர் தனது சிகிச்சைக்கு வரும் பெற்றோருக்கு அவர்கள் அனுமதியின்றி தனது விந்தணுவையே செலுத்தி அதன்மூலம் 49 குழந்தைகளுக்கு தந்தையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.