தனது 22வது வயதில் அபரிமிதமான உயரத்தை கவனிக்கத் தொடங்கினார் சுலேமனா அப்துல் சமேத்.
வடக்கு கானா நாட்டில் உள்ள கம்பகா என்கிற கிராமத்தில் வசித்துவரும் 29 வயது இளைஞரான சுலேமனா அப்துல் சமேத் என்பவர், 9 அடி 6 அங்குல உயரம் இருக்கிறார். இவரது சரியான உயரத்தை அளவீடுவதே முதலில் பெரிய சவாலாக இருந்துள்ளது. தனது உயரத்தை அளவீடுவதற்காக கிராமப்புற சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார் சுலேமனா அப்துல் சமேத். ஆனால் அங்கு அவ்வளவு பெரிய உயரத்தை அளக்கக்கூடிய கருவிகள் ஏதும் இல்லை. இதையடுத்து அவரை வெளிப்புறத்துக்கு அழைத்துச்சென்று ஒரு கம்பத்துக்கு அருகே நிறுத்தி உயரத்தை அளந்துள்ளனர். அதில்தான் சமேத் 9 அடி 6 அங்குல உயரம் இருப்பது கண்டறியப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி துருக்கியை சேர்ந்த சுல்தான் கோசென் உலகின் மிக உயரமான மனிதருக்கான கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். அவர் 8 அடி 2.8 அங்குலம் உயரத்துடன் காணப்படுகிறார். அவரைக் காட்டிலும் சுலேமனா அப்துல் சமேத் 9 அடி 6 அங்குல உயரத்துடன் இருக்கிறார். தனது கிராம மக்களால் அவுச்சே என செல்லமாக அழைக்கப்படும் இவர், தனது 22வது வயதில் அபரிமிதமான உயரத்தை கவனிக்கத் தொடங்கியதாகக் கூறுகிறார். இதுவே அவரை உடல்ரீதியாக பல்வேறு சிக்கலில் ஆழ்த்தியது.
தலைநகர் அக்ராவில் தனது சகோதாரருடன் வசித்து வந்தபோது முதுகுத் தண்டு வளைவு பிரச்னை ஏற்படவே, உடல்ரீதியாக அவதியுறத் தொடங்கினார் அவுச்சே. அதுமுதேலே அவர் வளைந்த முதுகுத்தண்டுடன் காணப்படுகிறார். உடலின் இணைப்பு திசுக்களை பாதிக்கும் ஒருவகை மரபணு கோளாறால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இது மிகவும் தீவிரமான சிக்கலாக இதய குறைபாடுகள் வரை உண்டாக்கக்கூடும் என்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த அறுவை சிகிச்சை அதிக செலவு பிடிக்கக்கூடியது என்பதால் மனம்தளர்ந்தார் அவுச்சே. இதனால் 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பிய அவுச்சே, ஓட்டுநராக வேண்டும் என்ற தனது கனவினை கைவிட்டார்.
இதுகுறித்து அவுச்சே கூறுகையில், "நான் மற்ற இளைஞர்களைப் போலவே கால்பந்து விளையாடுவேன்; நான் தடகள வீரராகவும் இருந்துள்ளேன். ஆனால் இப்போது என்னால் சிறிது தூரத்திற்கு கூட நடக்க முடியாது. அதிகப்படியான உயரத்தால் கார் டிரைவிங் படிக்க முடியாமல் போய்விட்டது " என வேதனை தெரிவிக்கிறார் அவர்.
உயரமான மனிதராக அவுச்சே அறியப்படுவதால் அவரை தேடி பலரும் வந்து அவருடன் புகைப்படம் எடுத்துவிட்டுச் செல்கின்றனர். தனது உடல் வேதனையை பொருட்படுத்தாமல் இன்முகத்துடன் தன்னை பார்க்க வருபவர்களை வரவேற்று புகைப்படத்துக்கு ஆர்வத்துடன் போஸ் கொடுக்கிறார் அவுச்சே.
தனது சகோதரர்கள் உள்பட உறவினர்கள் யாருக்கும் இந்த உயரப் பிரச்சினை இல்லை என்று கூறும் அவுச்சே, தனக்கு குடும்பத்தினர் அனைவரும் ஆதரவும் அன்பும் காட்டுவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறும் அவுச்சே தற்போது தனது ஆரோக்கியத்தை பேணுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அவுச்சே, தனது உடல்ரீதியான வலிகளை மறந்து தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறார். இந்த கடினமான சூழலிலும் கடவுள் தன்னை கைவிடவில்லை என்றும் கடவுள் என்னைப் படைத்த விதத்தில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் நேர்மறையாக பேசி நெகிழ்ச்சிப் படுத்துகிறார் அவுச்சே.