ஒரு மருத்துவரின் பிபிஇ பாதுகாப்பு கவச உடையில் இருந்து வாளி அளவுள்ள வியர்வை வெளியேறும் வீடியோதான் இப்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகிக் கொண்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கடந்த ஆறு மாதங்களாக மருத்துவமனைகளில் அயராது உழைத்து வருகின்றனர். நீண்டநேர வேலை ஒரு சிரமம் என்றால், மற்றொரு சிரமம் பாதுகாப்பு கவச உடையை பல மணிநேரங்கள் அணிந்திருப்பதுதான்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் 12 மணிநேரம்கூட பிபிஇ உடைகளை அணிந்திருக்கும் கட்டாயம் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் உடலே வியர்வை மழையில் நனைந்திருக்கும். வெளியாகியுள்ள இந்த சிறு வீடியோவில், ஒரு மருத்துவர் தனது கால்சட்டைகளைத் தூக்கி, காலில் இருந்து பிளாஸ்டிக் பைகளை அகற்றும்போது பிபிஇ சூட்டில் இருந்து பல லிட்டர் அளவுள்ள வியர்வை ஊற்றுவதைக் காட்டுகிறது. இந்த வீடியோ ஆகஸ்ட் 8 ஆம் தேதி வடமேற்கு சீனாவின் சிஞ்சியாங்கின் பிராந்திய தலைநகரான உரும்கியில் எடுக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.