கம்போடியா நாட்டில் திருக்குறளை அந்நாட்டின் தேசிய மொழியான கெமர் மொழியில் வெளியிடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து அங்கோர் தமிழ் சங்கம் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கம்போடியாவில் சியாம் ரீப் நகரில் வி.ஜி.பி உலக தமிழ் சங்கம் வழங்கிய திருவள்ளுவர் சிலை கம்போடிய நாட்டின் பாரம்பரிய மரியாதையுடன் சியாம் ரீப் தலைமை செயலக வளாகத்தில் நிறுவப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் தமிழகம் மட்டுமில்லாமல் மைசூர், ஆந்திரா மற்றும் மலேசியா, இலங்கை, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட பிரதிநதிகள் பங்கேற்றனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக திருக்குறளை கெமர் மொழியில் அடுத்த மாதம் வெளியிட இருக்கும் பிரதமர் மோடி மற்றும் மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் திருவள்ளுவர் சிலை சியாம் ரீப் நகரில் நிறுவ உதவிய கம்போடிய அரசிற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
.
இந்த நிகழ்வில் அங்கோர் தமிழ் சங்கம் தலைவர் சீனிவாசராவ், துணை தலைவர் ராமேஸ்வரன், நீதியரசர் வள்ளிநாயகம், வி.ஜி.பி உலக தமிழ் சங்கம் வி.ஜி சந்தோசம், புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா, மதிமுக துணை பொதுச்செயலாளரும் - மல்லை தமிழ் சங்க தலைவர் மல்லை சத்யா மற்றும் சித்த மருத்துவர் தணிகாசலம் மற்றும் கம்போடியா நாட்டின் கலை பண்பாட்டு துறை இயக்குநர் சுபிப் எனப் பலர் பங்கேற்றனர்.