தாய்லாந்து நாடாளுமன்றத்தில் தன் பாலின திருமணத்துக்கான சமத்துவ மசோதா (Same Sex Marriage), கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து செனட் சபையிலும் திருமண சமத்துவ மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு, ஜூன் 18ஆம் தேதி நடைபெற்றது. இதற்கு ஆதரவாக 130 செனட்டர்கள் வாக்களித்தனர், 18 பேர் வாக்களிக்கவில்லை, நான்கு பேர் மட்டுமே எதிராக வாக்களித்தனர். இதன்மூலம் விரைவில் தாய்லாந்தில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக்கப்படும். இந்த மசோதா செனட் குழு ஆய்வு செய்த பின்னர், அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். அதன்பின் மன்னரிடம் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்ட பின் சட்டமாக்கப்படும். தாய்லாந்து அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியதை அடுத்து, இந்த வகை சட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து சாதனை படைத்துள்ளது.
தவிர, ஆசியாவில் நேபாளம் மற்றும் தைவானுக்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடாகவும் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இதற்கு முன்னர், தைவான் அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு தன்பாலிய திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நேபாளத்தில், முதல்முறையாக சம பாலின திருமணம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.
உலகளவில் அன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, டென்மார்க், ஈக்வடார், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், மால்டா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்லோவேனியா, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, தைவான், யுனைடெட் கிங்டம், அமெரிக்கா, உருகுவே, தாய்லாந்து ஆகிய 36 நாடுகளில் தன் பாலின திருமணம் சட்டப்பூர்வமாக உள்ளது.
அதேநேரத்தில், ஆப்கானிஸ்தான், புருனே, ஈரான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுடன் குறைந்தபட்சம் 20 ஆசிய நாடுகள் தன்பாலின திருமண செயல்பாடுகளை தடை செய்கின்றன. தவிர, மரண தண்டனையையும் பரிந்துரைக்கின்றன.